27 October, 2010

XP-க்கு ஆப்பு! இது நாட்டாமை தீர்ப்பு!! + கூடுதல் I.T செய்திகள்


மைக்ரோசாஃப்ட் விண்டோசின் அடுத்த ரிலீஸ் "விண்டோஸ் 8" 2012-ஆம் வருடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ் 7 2009-ல் வந்தது. அதை வைத்து பார்த்தால், இனிமேல் சுமார் மூன்று/நான்கு  வருடங்களுக்கு ஒரு முறை புது விண்டோஸ் ரிலீஸ் செய்ய மைக்ரோசாப்ட் திட்டம் போட்டு உள்ளதாக தெரிகிறது.

விண்டோஸில் எட்டு போட்டு மைக்ரோசாஃப்ட் ஷொட்டு வாங்குமா? குட்டு வாங்குமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


XP-க்கு ஆப்பு. இது நாட்டாமை தீர்ப்பு.

இனிமேல் விண்டோஸ் XP-யை புது கணினியோடு pre-install செய்து விற்கக்கூடாது என்று மைக்ரோசாப்ட் கணினி தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக சொல்லிவிட்டது.  விஸ்டாவில் இருந்த பல பிரச்சனைகளால், மைக்ரோசாப்ட் XP-யை அப்படியே விட்டுவைத்திருந்தது.


விண்டோஸ் 7தான் வரலாற்றிலேயே அதிக வேகமாக விற்பனையாகும் ஆபரேடிங் சிஸ்டம் என்று பெயர் வாங்கியுள்ளது.

ஒரு நொடிக்கு 7½ லைசென்ஸ்கள் விற்பனை ஆகிறது என்று, வேறு உருப்படியான வேலை இல்லாதவர்கள் கணக்கு போட்டு சொல்லி இருக்கிறார்கள். 

பயன்படுத்துபவர்களுக்கு வைரஸ் வந்து  7½ பிடிக்காமல் இருந்தால் சரி.


சீகேட் உலகின் முதல்  3 TB (External) ஹார்ட் டிஸ்க்கை விற்பனைக் கொண்டுவந்துவிட்டது. TB என்றால் Terabyte. இதில் 120 High Definition சினிமா படங்கள் அல்லது 1500 வீடியோ கேம்களையும் சேமித்து வைக்க முடியும்.


கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு 12 வயசு பையன் அலெக்ஸ் மில்லர்,  ஃபயர்பாக்சில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டுபிடித்து மொசில்லா பெளண்டேஷனிடமிருந்து 3000 டாலர் வெகுமதி வாங்கிவிட்டான். நம்ம பசங்களும் இருக்காங்களே!


லேட்டஸ்டாக ஆப்பிள் வெளியிட்ட மேக்புக் ஏர்  கணினிகளில்  வழக்கமாக சேர்க்கப்படும் அடோபி ஃபிளாஷ் மென்பொருள் இல்லை.  ஆனால் மேக்கில் அடோபி ஃபிளாஷ் வேலை செய்வதை ஆப்பிள் தடுக்கவில்லை. அதனால் மேக் பயனர்கள் தாங்களாகவே ஃபிளாஷை டவுன்லோடு செய்து நிறுவிக்கொள்ளலாம்.


சுமார் 8.3 சதவீதம் சந்தை பங்கு உள்ள மேக் ஓஸ் X ஆபரேடிங் சிஸ்டத்தின் அடுத்த வெர்ஷன் 10.7 "Lion" என்று பெயரிடப்பட்டுள்ளது.

Mac OS X-ன் அனைத்து வெர்ஷன்களின் பெயர் பின்வருமாறு:

 10.0 Cheetah
 10.1 Puma
 10.2 Jaguar
 10.3 Panther
 10.4 Tiger
 10.5 Leopard
 10.6 Snow Leopard
 10.7 Lion


.

22 October, 2010

நல்ல, கெட்ட, விநோத IT செய்திகள்!

 
ஏலத்துக்கு வந்த Sex.com டொமைன் பெயர் சுமார் $13 மில்லியன் டாலருக்கு விலைபோயுள்ளது.


அக்டோபர் 22 2010 அன்று தன் முதல் பிறந்தநாளை கொண்டாடும் விண்டோஸ் 7, இதுவரை சுமார் 240 மில்லியன் காப்பிகள் விற்றுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.


இன்டெர்நெட் செக்யூரிட்டி & ஆன்டிவைரஸ் மென்பொருள் தயாரிக்கும் காஸ்பெர்ஸ்கி லேபின் வெப்சைட் ஹேக் செய்யப்பட்டு, போலி ஆன்ட்வைரஸ் டவுன்லோடு செய்யுமாறு மாற்றப்பட்டது. சம்பவம் நடந்த மூன்றரை மணி நேரத்திற்குப்பிறகுதான் இப்படி நடந்துள்ளது என்று காஸ்பெர்ஸ்கிக்கு தெரியவந்ததாம்.  போலீஸ் வீட்லேயே திருட்டா?!


ஆறு வாரங்களுக்கு ஒருமுறை புது வெர்ஷன் வரும் என்று கூகிள் சொல்லி (மிரட்டி?!) இருப்பதாக தெரிகிறது.

இந்த குரோம் தொல்லை தாங்க முடியலே நாராயணா.


2010 வருடம் முடியும்போது  சுமார் 2 பில்லியன் பயனர்கள் இன்டெர்நெட்டை பயன்படுத்துவார்கள் என்று இன்டெர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் யூனியன் (ITU) மதிப்பிட்டுள்ளது. அதாவது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு!


யாரு அதிக GHz சிப் போடுறாங்கன்னு இருந்த போட்டி, இப்போ யாரு அதிக Core போடுறாங்கன்னு மாறிஇருக்கு. இந்த போட்டி  ரொம்ப நாளுக்கு நீடிக்காதுன்னு இன்டெலின் எதிரி No.1 AMD சொல்லி இருக்கு. எதிர்காலத்தில் எத்தனை கோர் என்பதைவிட எவ்வளவு efficient என்பதில்தான் போட்டி இருக்குமாம். அப்படி போடு.


கூகிளின் ஆன்ட்ராய்ட் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெர்ஷன் 4-க்கு Ice Cream என்று Codename வைத்து இருக்கிறார்களாம். முந்தைய Codenameகள்

Version 1.5       Cupcake,
Version 1.6       Donut,
Version 2.0/2.1 Eclair,
Version 2.2       Froyo (Frozen Yogurt)
Version 3.0       Gingerbread
Version 3.5       Honeycomb
Version 4.0       Ice Creamதென்கொரியா 2012-ஆம் வருடத்திற்குள், தனது மக்களுக்கு 1000 Mbps ( 1 Gbps) வேகமுள்ள ப்ராட்பேண்ட் இணைப்புதர உத்தேசித்துள்ளது. அந்த வேகத்தில் 700 MB உபுன்டு சிடியை ஆறே நொடிகளில் டவுன்லோடு செய்துவிடலாம்.


குறைஞ்ச செலவுலே ஒரு செல்போன் பேக்கேஜ் ( voice, text, data) வாங்கறதா இருந்தா எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கு போட்டு பார்த்ததில், அது அமெரிக்கா, கனடாவில் மிக அதிக விலையாகவும், இந்தியா, ஹாங்காங்கில் மிக மலிவாகவும் கிடைப்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

மிஸ்ட் கால் பேக்கேஜ்தான் எல்லா நாட்டுக்கும் ஒரே ரேட்!


இவ்வளவு நாள் extension (add-on) வசதி இல்லாமல் வந்துகொண்டு இருந்த ஓபெரா (Opera) உலவி, அதன் அடுத்த வெர்ஷன் 11-லிருந்து அவற்றை சப்போர்ட் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறது.


கூகிள் ஆன்ட்ராய்டுக்கான அடோபி ஃபிளாஷ் பிளேயர் இதுவரை 1 மில்லியன் முறை டவுன்லோடு செய்யப்பட்டு இருப்பதாக ZDNet.com மதிப்பிட்டுள்ளது.

10 August, 2010

கணினிநுட்ப வளர்ச்சியில் தமிழ் மொழி வலைப்பூக்களின் பங்கு


இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றோர், கிராமங்களில் வாழும் மக்கள், வணிகபெருமக்கள், இதுவரை கம்ப்யூட்டரை முறையாக கற்க வசதி/நேரம் இல்லாமல் இருப்பவர்கள், இப்படி சமூகத்தின் பலதரப்பட்ட மக்களும், தொடந்து நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களால் கணினியையும், இணையத்தையும் பயன்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.

உதாரணம் : ஆன்லைன் வங்கி செயல்பாடு/பணபரிமாற்றம், ஆன்லைன் பங்கு வணிகம், ஆன்லைன் ரயில்/விமான முன்பதிவு, ஆன்லைன் தேர்வுகள். இப்படி நிறைய உள்ளன.

கணினிகள் பெரும் முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், ஒரு சாதாரண மனிதன் (Lay person) அதை புரிந்துகொண்டு முழுமையாக பயன்படுத்துவதும்,  வைரஸ்கள் , உளவு மென்பொருட்களின்  எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் சீராக பராமரிப்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

கணினி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்தாலும், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ குறைந்த அளவே தெரிந்துகொள்ள முடிகிறது.

இப்படிப்பட்டவர்கள், நிறைய விஷயங்களை அனுபவத்தில்தான் கற்றுக் கொள்கிறார்கள். “என்னதான் எச்சரிக்கையாக  இருந்தாலும், வைரஸ் வந்து கோப்புகளை  அழித்துவிட்டது” என்று வருத்தப்படுபவர்களை  நாம் தினமும் பார்க்கிறோம். விவரம் தெரியாத/ முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு இணையம் அபாயகரமானதாக கூட மாறிவிடுகிறது. குலுக்கலில் பரிசு கிடைத்ததாக வரும் மின்னஞ்சலை அப்பாவித்தனமாக நம்பி, அதற்கு முன்பணம் அனுப்பி பரிசுத்தொகையை பெறும் முயற்சியில் பணநட்டம் அடைபவர்கள் பலர்.

அதிலும் ஆங்கிலம் சரியாக தெரியாமல் இருப்பவர்களின் நிலைமை மேலும் கடினம்தான். ஏனென்றால் கணினி/இணையம் சம்பந்தமான அதிகபட்ச செய்திகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அதனால் நிறைய தேவையான விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.

தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் (blogs) இப்படிப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளன. மேலும் இளைய தலைமுறை பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கும் சிறந்த அறிவுச்சுரங்கமாக இவை திகழ்கின்றன.

எந்தப் பாடத்தையும்  தாய் மொழியில் படித்தால் சிறந்த முறையில் அதை கற்றுக்கொள்ளமுடியும் என்பது அறிஞர்களின் கருத்து.

தமிழ் மொழி மேல் பற்று கொண்ட தன்னார்வலர்கள் தொழில்நுட்பத்தையும் தமிழிலேயே கொடுத்தால் தமிழர் பயனடைவார்கள் என்று பிளாக்கர்.காம் (http://www.blogger.com/), வேர்ட்பிரஸ்.காம் (http://wordpress.com/) போன்ற இலவச சேவைகளை பயன்படுத்தி வலைப்பூக்களை ஆரம்பித்து, தங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.  சில வலைப்பூக்கள் கணினி திரையை ஓடும் படமாக (வீடியோ) பதிவு செய்து வெளியிட்டு சிறப்பாக பணியாற்றுகின்றன.

வலைப்பூக்களின் வாசகர்களே எதிர்காலத்தில் தாங்களும் தமிழில் வலைப்பூ ஆரம்பித்து தமிழுக்கு தொண்டாற்ற வாய்ப்பு உள்ளது.

தமிழ் விக்கிபீடியாவும் இப்படிப்பட்ட மக்களுக்கு உதவுவதை யாராலும் மறுக்க இயலாது.  ஆனால் விக்கிபீடியாவில் இருக்கும் கட்டுரைகளை படிப்பவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்வது அல்லது தங்கள் ஐயத்தை தீர்த்துக்கொள்ள எழுதியவரை தொடர்புகொள்வது போன்ற செயல்கள் எளிதல்ல .  ஆனால், தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்களில் அந்த வசதி உள்ளது. பொதுவாக ஓரிரு நாளில் பதில் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறது.

அவ்வப்போது நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும் வலைப்பூக்கள்  வழியாக தமிழிலேயே உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். சில தமிழ் நாளிதழ்களில் வாரம் ஒருமுறைதான் கணினி கட்டுரைகள் அல்லது கணினி மலர்கள் வருகின்றன. அதனால் கணினி/இணைய உலகத்தில் நிகழும் பல நிகழ்வுகளை பிரசுரிக்க/அறிய முடியாமல் போகிறது.

மேலும் http://wiki.pkp.in/forum:start போன்ற விவாத மேடைகளில் வாசகர்கள் தங்கள் சந்தேகங்களை தமிழிலேயே கேட்டு, தமிழிலேயே விடைகளை அறிந்துகொள்ளலாம்.  கணினி வாங்குதல் அல்லது அதன் பயன்படுத்துவதில் சிக்கல்  போன்ற நடைமுறை பிரச்சனைகளுக்கு இத்தகைய விவாத மேடைகளில் பதில் கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்து தாங்களும் பங்கு பெறலாம்.

இத்தகைய வலைப்பூக்களின் பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிலிஷ் (http://ta.indli.com/), தமிழ்மணம் (http://www.tamilmanam.net/) போன்ற திரட்டிகளுக்கு பெரும்பங்கு உண்டு.

தற்போது தொழில்நுட்பம் மட்டுமே எழுதும் தமிழ் வலைப்பூக்கள் ஏறக்குறைய 40 உள்ளன.  அலெக்ஸா.காம் (Alexa.com) தரவரிசைப்படி தொழில்நுட்ப வலைப்பூக்களின் தரவரிசை, தமிழ் சமூகத்தின்  நலனுக்காக ஒவ்வொரு மாதமும் சுதந்திர மென்பொருள் (http://www.suthanthira-menporul.com) வலைப்பூவில் கடந்த ஒரு வருடமாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. மேலும் பலர் தொழில்நுட்ப பதிவுகளை மற்ற செய்திகளுடன் சேர்த்து எழுதுகிறார்கள். அந்த வலைப்பூக்களின் முகவரிகளும்  இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த வலைப்பூக்களைப் பற்றிய விழிப்புணர்வு, கணினிகளை பயன்படுத்தும் மக்களிடம் குறைவாகவே உள்ளது. மேலும் நாளிதழ், மாத இதழ், தொலைக்காட்சி  போன்ற ஊடகங்களிலும் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்களைப் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகின்றன. இந்த நிலை மாறி  ஊடகங்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி ஆதரவு தந்தால் பொதுமக்கள் மேலும் பயனடைய முடியும். இந்த சேவை பற்றி தெரிய வரும் பலர், 'முன்பே தெரியாமல் போய்விட்டதே' என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது.

கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) திட்டம், வலைப்பூக்களுக்கு விளம்பரம் கொடுத்து அவர்கள் வருமானத்திற்கு உதவுகிறது. ஆனால் தமிழ் மொழி மட்டுமல்ல. இந்தியாவின் எந்த மொழியில் வலைப்பூ இருந்தாலும் (இந்தி உட்பட), கூகிள் ஆட்சென்ஸ் அதற்கு விளம்பரம் கொடுப்பது இல்லை. அவ்வாறு கூகிள்,  தமிழுக்கு விளம்பரம் தந்தால்,  அனைத்து வகை தமிழ்மொழி வலைப்பூக்களும் மேலும் சிறப்பான முறையில் தாய்மொழிக்கு சேவை செய்ய முடியும்.

சில குறிப்பிடத்தக்க தமிழ்மொழி தொழில்நுட்ப வலைப்பூக்கள்

http://cybersimman.wordpress.com/
http://suryakannan.blogspot.com/
http://ponmalars.blogspot.com
http://tvs50.blogspot.com


உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் http://www.infitt.org/ வெளியிடும் மின்மஞ்சரி மின்னிதழ், இவ்வாண்டு ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு 2010 சிறப்பு மலராக வந்துள்ளது. இதில் கணினி தொடர்பான 40 கட்டுரைகள் உள்ளன.

அதில் ஒன்றாக எனது மேற்கண்ட கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

மின்னிதழின் சுட்டி PDF கோப்பாக இங்கு (4.7 MB)

மேற்கண்ட என் கட்டுரையை மட்டும் PDF கோப்பாக பெற
சுட்டி இங்கு (100 KB)

04 June, 2010

ATM-ல் தமிழைத் தொடுவோம்!


நாம் கோவிலுக்கு தினமும் போகிறோமோ இல்லையோ, ஏ.டி.எம்முக்கு அடிக்கடி போவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறோம். நாலைந்து பேர் வரிசையில் இருந்தால் முடிந்தவரை என் வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு அடுத்த ஆளுக்கு வழி விடுவதிலேயே கவனம் இருக்கும். இதனாலேயே பலமுறை திரையில் தமிழ் இருந்தாலும், ஆங்கிலத்திலேயே வேலையை முடித்துவிடுவேன்.

தற்செயலாக இதைப்பற்றி ஒரு கருத்து என் மனதில் வந்தது. தமிழ் எனது தாய்மொழியாக இருந்தும் ஏன் நான் ஆங்கிலத்தை பயன்படுத்தி பணம் எடுக்கிறேன். தமிழை திரையில் தொட்டு பணம் எடுக்க ஏன் தயக்கம் என்று?

ஆங்கிலம் சரியாக தெரியாதவர்கள் வேறுவழி இல்லாமல் தமிழைத் தொட்டுதான் பணம் எடுக்கவேண்டும். தமிழில் வலைப்பூ எழுதும் நானே ஆங்கிலத்தை பயன்படுத்துகிறேனே என்று வெட்கப்பட்டேன். தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட ஆங்கிலத்தை பயன்படுத்தி பணம் எடுக்கிறார்களே என்று மனவேதனைப்பட்டேன்.

பிறகு பழக்கவழக்கத்தில் சிலமுறை ஆங்கிலத்தை தொட்டுவிட்டாலும், இப்போது அதிகபட்சம் தமிழை மட்டுமே திரையில் தொட்டு பணம் எடுக்கிறேன்.

ஆரம்பத்திலேயே தமிழ் ஏ.டி.எம்மில் இருந்திருக்குமா என்றால் சந்தேகமே. யாரோ போராடி தமிழை ஏ.டி.எம்மிற்கு கொண்டு வந்து இருப்பார்கள். அப்படி போராடி வந்திருக்கக்கூடிய தமிழை உதாசீனப்படுத்துவது நமக்கு அழகா?

ஏ.டி.எம்மில் ஆங்கிலம் மட்டும் இருந்தால் பரவாயில்லை. ஏ.டி.எம்மில் தமிழ் இருக்குமாம். ஆனால் பயன்படுத்த மாட்டார்களாம்.

இப்போது இருக்கும் தமிழைக்கூட யாரும் பயன்படுத்தவில்லை என்று ஏ.டி.எம்மில் இருந்து தமிழை எடுத்துவிட்டால், என்ன செய்வார்கள்? அப்போதுதான் மானமே போச்சுன்னு பதிவுமேல் பதிவு எழுதி குவித்து தமிலிஷில் நூறு ஓட்டு வாங்கி, தவறு நம்மேல் இருக்க, யார்யாரையோ காறித்துப்பி "கடமை"யை செய்த திருப்தி அடைவார்களா?

கடந்த 50 வருடங்களாக தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. டெலிபோன், செல்போன், மொபைல், டிவி, வீடியோ, டிஷ் டிவி, கம்ப்யூட்டர், ஐபோட், கரண்ட், பஸ், டிக்கட், எஸ்.எம்.எஸ் இப்படி பல ஆங்கில வார்த்தைகள் நமது நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவது தமிழனுக்கு சாதாரணமாக போய்விட்டது.

சுமார் 5000 வருடங்களாக தழைத்து வளர்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மொழிக்கு வேறெந்த காலகட்டத்திலும் இவ்வாறு கடுமையான சோதனை வந்ததில்லை. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் புதிய தொழில்நுட்பத்தில் உருவானவையாக இருப்பதால், அதற்கு தமிழ் சொற்களை பயன்படுத்தாமல்/ உருவாக்காமல் நேரடியாகவே அந்த ஆங்கில சொற்களை பயன்படுத்தி தமிழுக்கு துரோகம் செய்து வருகிறோம்.

நாம் இப்போது பிறமொழி சொற்களை கலந்துபேசி தமிழை வேகமாகவே அழித்துக்கொண்டு இருப்பதுபோல், இதுவரை வாழ்ந்த எந்த தலைமுறை தமிழர்களும் செய்திருக்கமுடியாது.

இப்போதே தமிழுக்கு இந்த நிலைமை என்றால் அடுத்தடுத்த தலைமுறையில் தமிழை எப்படி பேசப்போகிறார்கள் என்று நினைத்தாலே உயிர் போகிறது.

பத்து மாதம் சுமந்த தாயை மறக்கக்கூடாது. பத்து வருடம் படித்த பள்ளியை மறக்கக்கூடாது என்று சொல்வார்கள்.

தாய் தந்தை மட்டும் இல்லை. நம் பாட்டன், முப்பாட்டன் என்று ஐயாயிரம் வருடங்களாக நமது முன்னோர்களின் நல்லது, கெட்டது, மகிழ்ச்சி, கோபம், ஆசை, பாசம், காதல், காமம் இப்படி அனைத்து உணர்ச்சிகளுக்கும் மொழி வடிவம் கொடுத்து பாராட்டி சீராட்டி வந்த தாய்மொழி தமிழை நன்றி கெட்டு இப்படி மொழிக்கொலை செய்கிறோமே என்று நம்மில் ஒருவராவது, ஒரு கணமாவது மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு தலைகுனிந்து இருக்கிறோமா? தாய்மொழிக்கு துரோகம் செய்பவனை மனிதனாக நினைக்கமுடியுமா?

யாரோ ஒருவர் பொது இடத்தில் தமிழ் மட்டுமே பேசவேண்டும் என்று முயற்சி செய்தால்கூட, அந்த முயற்சியை கிண்டல் செய்யும் கூட்டம் ஒன்று எங்கிருந்தோ கூடிவிடும். இதில் என்ன கேவலம் என்றால் அவர்கள் அனைவருக்கு தாய்மொழி தமிழாகத்தான் இருக்கும். தயவு செய்து அந்த தாய்மொழி துரோக கூட்டத்தில் சேர்ந்துவிடாதீர்கள். அவர்களுக்கு சுத்தத் தமிழிலேயே கண்டனம் செய்யுங்கள்.

ஆங்கிலத்தை கலந்துபேசி தமிழை அழிக்க ஆரம்பித்தது இந்த தலைமுறைதான் என்ற அவப்பெயர் நமக்கு தேவையா?

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்பு கட்டுரை.

19 May, 2010

உபுன்டு எட்டு அடி - லினக்ஸ் மின்ட் பதினாறு அடி!!


உபுன்டு லினக்ஸை அடிப்படையாகக் (base) கொண்டு பல லினக்ஸ் distributions வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் லினக்ஸ் மின்ட்.

உபுன்டுவே அழகுதான். அந்த அழகுக்கு அழகு செய்தால்? அதுதான் லினக்ஸ் மின்ட்!

உபுன்டுவை இன்னும் மெருகேற்றி லினக்ஸ் மின்டாக கொடுக்கிறார்கள்

லினக்ஸ் மின்டை பயன்படுத்துவது உபுன்டுவை பயன்படுத்துவது போல்தான் இருக்கும்.

டல்லடிக்கும்  Brown வண்ண default வால்பேப்பரோடு உபுன்டு வரும்போதே அதை தூக்கிப்போட்டுவிட்டு, கண்கவர் default வால்பேப்பரோடு வந்த லினக்ஸ் மின்ட், லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் மனதில் "பச்சக்" என்று ஒட்டிக்கொண்டது.
லினக்ஸ் மின்ட் = 99% உபுன்டு + 1% எக்ஸ்ட்ரா
லினக்ஸ் மின்ட் = உபுன்டு ++
உபுன்டு வாழைப்பழம் - லினக்ஸ் மின்ட் உரித்த வாழைப்பழம் 
உபுன்டு புது பிளாட். லினக்ஸ் மின்ட் fully furnished பிளாட்.
உபுன்டு சாதா மீல்ஸ். லினக்ஸ் மின்ட் ஸ்பெஷல் மீல்ஸ்.
உபுன்டு அழகான பெண். லினக்ஸ் மின்ட் மேக்கப் போட்ட அழகான பெண். 
சிலருக்கு உபுன்டு அருக்காணி. பலருக்கு லினக்ஸ் மின்ட் அழகுராணி.

லினக்ஸை முன்னே பின்னே தெரியாதவங்களுக்கு லினக்ஸை அறிமுகம் செய்யனும்னா, உபுன்டுவுக்கு பதிலா லினக்ஸ் மின்ட் சிடி தரமுடியுமான்னு பாருங்க!

உபுன்டு பயன்படுத்தும்போது, "குறிப்பிட்ட plug-in இன்ஸ்டால் செய்தால்தான் நீ இந்த பக்கத்தை முழுசா பார்க்க முடியும்"னு வலைப்பக்கங்கள் அவ்வப்போது வெறுப்பேத்தும்.

புதியவர்கள் உபுன்டுவில் இதையெல்லாம் எப்படி சேர்ப்பது என்று தெரியாமல் ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி முடியை பிய்த்துக்கொண்டு, உபுன்டுவை ஓசியிலே கொடுத்தாகூட வேண்டாம்யான்னு ஓட்டம் எடுப்பார்கள்.


எப்படி சேர்ப்பது என்று தெரிந்தால்கூட அதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டு தேடி உபுன்டுவில் சேர்ப்பதற்கு சில பல மணி நேரம்கூட ஆகலாம். அதுக்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்குங்க?

அந்த அனுபவம் லினக்ஸ் மின்டில் குறைவு.

ஏனென்றால் Firefox உலவியில் நமக்கு தேவைப்படும் Realplayer, divx, quicktime, shockwave flash, லொட்டு லொசுக்கு, இத்யாதி இத்யாதி add-on-களை எல்லாம் மின்ட் முதலிலேயே சேர்த்து கொடுத்துவிடுகிறது. நேரம் மிச்சம்.


டிவிடி, எம்.பி3, இத்யாதி கணினியில் பயன்படுத்த எந்த இயங்குதளமாக இருந்தாலும் மல்டிமீடியா codec சப்போர்ட் தேவை.

சில சட்டசிக்கல்களால் உபுன்டு அதை சேர்த்து தருவதில்லை. ஆனால் அதை எல்லாம் சேர்த்து லினக்ஸ் மின்ட் தருகிறது. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் லினக்ஸ் மின்ட் பயன்படுத்துவது சட்ட விரோதமாக இருக்கலாம்.

எதைப்போட்டாலும் play பண்ணும்னு ஒரு டிவிடி ப்ளேயர் விளம்பரம் பார்த்து இருப்பீர்கள். அந்த concept உபுன்டுவை விட லினக்ஸ் மின்டுக்கே பொருந்தும்.

எது எப்படியோ, லினக்ஸ் விரும்பும் புதியவர்களுக்கு லினக்ஸ் மின்ட் ஒரு வரப்பிரசாதம்தான்.

ஆனால் ஒரே ஒரு குறை என்னன்னா, உபுன்டு சிடி வீட்டுக்கு வருவது போல் லினக்ஸ் மின்ட் வராது.**

**இந்த கட்டுரை எழுதும்போது உபுன்டு சிடி இலவசமாக வந்தது. அதன்பின் சில காலம்  காலம் கழித்து அந்த சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

லினக்ஸ் மின்டை டவுன்லோடு செய்ய ... http://www.linuxmint.com/download.php

அனைத்து உபுன்டு பதிவுகளையும் ஒரே பக்கத்தில் பார்க்க ubuntu - உபுன்டு tag கிளிக் செய்யவும்.

01 January, 2010

சக பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்!

தமிழ் பதிவுலகம் பல குழுக்களாக பிரிந்து செயல்படுவதாக செய்திகள் படித்து இருக்கிறேன். என்.டி.டி.வி ஹிந்துவில் வந்த தமிழ் தொழில்நுட்ப பதிவர்களின் நிகழ்ச்சிக்கு வந்த வரவேற்பு, அந்த கருத்து தவறாக இருக்குமோ என்று நினைக்க வைத்துவிட்டது.

பதிவராக வருவதற்குமுன், நயன்தாரா என்ற பெயரில் wiki.pkp.in தளத்தில் பங்கெடுத்துக்கொண்டேன். "கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துவிட்டது. இப்போது என்ன செய்வது?" என்று கவலையோடு தீர்வு தேடி வருபவர்களை துரத்தி துரத்தி "லினக்ஸ் போட்டுக்கொள்ளுங்கள். வைரஸ் வராது" என்று சொல்வது என் வேடிக்கையான வாடிக்கையாக இருந்தது.

அந்த டிவி நிகழ்ச்சி பற்றிய என் அறிவிப்பு அடங்கிய பதிவையும், என்.டி.டி.வி ஹிந்துவுக்கு நன்றி சொன்ன பதிவையும் யூத்ஃபுல்விகடன் தேர்வு செய்து, இந்த செய்தி மேலும் பலரிடம் சென்றடைய உதவிசெய்தது. விகடனுக்கு என் நன்றிகள்.

பிரபல தொழில்நுட்ப பதிவர்கள் அனைவரும், "நாம்தான் அந்த நிகழ்ச்சியில் இல்லையே. ஏன் கண்டுகொள்ள வேண்டும்" என்று நினைக்காமல், அவரவருக்கு பிடித்த விதத்தில் இந்த கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட செயல், மற்ற பதிவர்களுக்கு ஒரு பின்பற்றத்தக்க முன்னுதாரணமாக அமைந்தது.

தமிலிஷிடமிருந்து மின்னஞ்சலில் வாழ்த்துக்கள் வந்தன. இது சம்பந்தமாக பதிவுகள் எழுதியும், வீடியோவிற்கு லின்க் கொடுத்தும் ஆதரவு தெரிவித்த பிகேபி, டிவிஎஸ்50, தமிழ்நெஞ்சம், raafi.com, சைபர்சிம்மன், சூர்யா கண்ணன், கெளதம் இன்போடெக் வடிவேலன், Tamiltech.info கார்த்திகேயன், பதிவுகளுக்கு ஓட்டு போட்டவர்கள் இப்படி அனைவருக்கும் என் நன்றிகள்.

யோசித்துப் பார்த்தால், சமூக நலனுக்காக ஊர்கூடித்தான் ஓரணியாக தேர் இழுத்து இருக்கிறோம் என்று புரியும்.
back to top