23 October, 2011

உபுன்டு டெஸ்க்டாப் LTS-க்கு இனிமேல் 5 வருட சப்போர்ட்!


ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் உபுன்டு லினக்ஸ், சுமார் 2 வருடங்களுக்கு ஒரு முறை LTS (Long Term Support) ரிலீஸாக வெளிவரும். ஒவ்வொரு முறையும் சர்வர், டெஸ்க்டாப் என்று இரண்டு எடிஷன்கள் கண்டிப்பாக உண்டு.

அதாவது 3 ரிலீஸ்கள் தொடர்ந்து Non-LTS-ஆக வெளிவந்தால் நான்காவது ரிலீஸ் LTS ஆக வெளிவரும்.

LTS என்றால் என்ன? என்று தெரிந்துகொள்ள  

அந்த வகையில் அடுத்த 12.04 ரிலீஸ் LTS ரிலீஸாக வரப்போகிறது. அதற்கு 'ப்ரெசிஸ் பாங்கோலின்' (Precise Pangolin) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். பாங்கோலின் என்றால் எறும்புத்தின்னி என்று நினைக்கிறேன்.

இது உபுன்டுவின் 16-ஆவது ரிலீஸ்.

இது உபுன்டுவின் நான்காவது LTS ரிலீஸ். இதற்குமுன் 6.06, 8.04, 10.04 ரிலீஸ்கள் LTS-ஆக வெளிவந்தன. (உதாரணமாக 10.04 என்றால் 2010வது வருடம், 04வது மாதம் என்று அர்த்தம்).

உபுன்டு LTS என்றாலே இதுவரை சர்வர் எடிஷனுக்கு 5 வருடங்களும், டெஸ்க்டாப் எடிஷனுக்கு 3 வருடங்களும் சப்போர்ட் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த LTS வெர்ஷனில் இவ்விரண்டு எடிஷன்களுக்கும் 5 வருடங்கள் சப்போர்ட் கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இதனால் கணினிகளை நிர்வகிப்பவர்களுக்கு வேலை குறையும். 5 வருடங்களுக்கு ஒருமுறை பயன்படுத்துபவர்களுக்கு பயிற்சி கொடுத்தால் போதும். மேலும் டெஸ்க்டாப் வெர்ஷனுக்கு மென்பொருள் தயாரிப்பவர்கள் 3 வருடத்திற்கு ஒரு முறை சப்போர்ட் உள்ள வெர்ஷனுக்கு மாறத் தேவையில்லை.

ஆனால் இதில் ஒரு விஷயம் இருக்கிறது. முதல் 2 வருடங்களுக்குத்தான் சந்தையில் புதிதாக வரும் வன்பொருட்களூக்கு சப்போர்ட் தருவார்கள். அப்புறம் கிடையாது. அப்படின்னா 2 வருடங்களுக்கு பிறகு சந்தையில் அறிமுகமாகும் புதிய வன்பொருட்களுக்கு இந்த ரிலீஸ் ஆதரவு தராது. ஆனால் 5 வருடங்களுக்கும் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு சப்போர்ட் கிடைக்கும்.

இப்போது இருக்கும் வன்பொருளிலேயே கணினியை இயக்குபவர்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகும் தாராளமாக அதே கணினியை ஓட்டுக்கொள்ளலாம். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அறிமுகமாகும் புதிய வன்பொருள் உள்ள கணினிக்கு மாறினால் அடுத்த/அப்போதைய LTS-தான் பயன்படுத்த வேண்டி இருக்கும்.

LTS ரிலீஸ் என்றால்கூட உபுன்டு இலவசம்தான்.

Picture attribution Piekfrosch
http://en.wikipedia.org/wiki/File:Pangolin_borneo.jpg

16 October, 2011

டவுன்லோட் = நகலிறக்கம்


தமிழில் கணினிநுட்ப பதிவு எழுதுபவர்கள் முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய தமிழ் சொற்களை பயன்படுத்தினால், மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்பது எனது அனுபவம்.

உதாரணத்துக்கு ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களை சுதந்திர மென்பொருள் என்று அழைக்கிறேன்.

எப்படி பயன்படுத்துவது? என்பதில் 'சுதந்திரம்' கொடுப்பதால் சுதந்திர மென்பொருள்!

இப்படி காரணம் சொல்லி புரிய வைத்து விட்டால், அந்த தமிழ் வார்த்தையை மக்கள் மனதில் ஏற்றிகொண்டு விடுவார்கள்.

அதுவும் எளிதான, நிகழ்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளாக இருந்தால் தயக்கமின்றி பயன்படுத்த முன்வருவார்கள்.

அதனால் ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளை நாமே தேடி கண்டுபிடிக்கலாம் அல்லது உருவாக்கலாம்.

இதனால் தமிழ் வளருமே தவிர அழியாது.  புதுப்புது தமிழ் வார்த்தைகளை தமிழர்களாகிய நாம் உருவாக்காவிட்டால் வேறு யார் உருவாக்கி பயன்படுத்துவார்கள்?

ஆங்கிலத்தில் பேசலாம். அதற்காக தமிழ் மொழியை அழிக்க வேண்டுமா?

சிலர் அதை அறியாமல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தினால், அவர்கள் பேசும்போது/எழுதும்போது/சிந்திக்கும்போது தமிழிலேயே செயல்படுவார்கள்.

Download என்று ஒரு ஆங்கில வார்த்தையை நாம் அப்படியே பயன்படுத்துகிறோம்.  நானும் அப்படியே பயன்படுத்தி இருக்கிறேன்.

அதை பதிவிறக்கம் என்று சிலர் சொல்கிறார்கள்.  வரவேற்கிறேன்.  ஆனால் பதிவு என்பதை விட மிகப்பொருத்தமான வார்த்தை இருக்கலாம் என்று தேடினேன்.  கிடைத்தது!

இணையத்தில் இருக்கும் ஒரு  ஃபைலை (படம், பாட்டு, காணொளி இப்படி பலவகை) அப்படியே நகல் எடுத்து நம் கணினியில் இறக்கிக்கொள்கிறோம்.

அதை நகலிறக்கம் (நகல் + இறக்கம்) என்றால் பொருத்தமாக இருக்குமே!

நகல் என்ற வார்த்தையை ஏற்கனவே copy/duplicate என்னும் அர்த்தத்தில் நடைமுறை வாழ்கையில் பயன்படுத்தி வருகிறோம்.

'நகல்' பெரும்பாலோருக்கு தெரிந்த வார்த்தைதான்.  அதனால் நகலிறக்கம் என்று எழுதினால் எளிதாக மக்கள் புரிந்துகொள்வார்கள்.

பிறகு என்ன தயக்கம்?  டவுன்லோடு என்ற வார்த்தைக்கு பதிலாக நகலிறக்கம் என்றே சொல்லப் பழகுவோம்.

Image credit : http://en.wikipedia.org/wiki/File:Download.svg
back to top