23 December, 2012

அதுக்கு இப்படிகூட வழி இருக்கா!?

 

1.  எல்.சி.டி/எல்.இ.டி டிவி இப்படி ஏதாவது உங்க வீட்டில் இருந்தால், சாதாரண வேலைகளுக்கு டெஸ்க்டாப்/ மடிக்கணினி மானிட்டரையும், யூட்யூப் பார்க்கும்போது பெரிய எல்.சி.டி டி.வி மானிட்டரையும் பயன்படுத்தலாமே!

இப்போது நிறைய டிவி மாடல்களில் HDMI இன்புட் சேர்ந்தே வருவதால், டெஸ்க்டாப் பிசி/மடிக்கணினி வாங்கும்போது HDMI அவுட்புட் இருப்பதுபோல் வாங்கினால் படத்தை தெளிவாக பார்க்கலாம்.

வரும் ஜனவரி 1 விற்பனையில் எல்.சி.டி/எல்.இ.டி டி.வி வாங்க இருப்பவர்கள் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளவும்.

2.  இப்போது பலர் DTH இணைப்புகளுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

என் செட்டாப் பாக்சில் பென்டிரைவை பயன்படுத்தி ரெகார்ட் செய்துகொள்ளலாம் என்று தெரிந்தது.

அப்படி ரெகார்ட் ஆகிறதா என்று சோதனை செய்து பார்த்ததில் சொல்லியபடி ரெகார்ட் ஆனாலும், புதிய பிரச்சனை வந்தது.

செட்டாப் பாக்ஸ் உபயோகத்தில் இருக்கும்போது அதுவே ரொம்ப சூடாகிவிடுகிறது.  பென்டிரைவை அதனுடன் நேரடியாக இணைப்பதால், பென்டிரைவுக்கும் அந்த வெப்பம் பரவிவிடுகிறது.

பென்டிரைவுக்கு வாரண்டி காலம் முடியவில்லை என்றாலும், அதை இவ்வளவு சூடேற்றினால் சீக்கிரம் கெட்டுவிடும். அதிக சூடு எலக்ட்ரானிக்சுக்கு ஆகாது.


இந்த பிரச்சனையை தீர்க்க ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன்.  வழி கிடைத்தது.

ஒரு யூ.எஸ்.பி எக்ஸ்டென்ஷன் கேபிள் வாங்கி, அதன் ஒரு முனையை செட்டாப் பாக்சின் யூ.எஸ்.பி போர்ட்டில் இணைத்து, அதன் மறு முனையில் பென்டிரைவை சொருகினேன். இப்போது பென்டிரைவ் முன்மாதிரி சூடாவதில்லை.

இப்படி செய்தால் பென்டிரைவுக்கு நல்ல ஆயுசு வரும்!


அந்த யூ.எஸ்.பி எக்ஸ்டென்ஷன் கேபிள் நான் 35 ரூபாய்க்கு வாங்கியதாக ஞாபகம். உங்களுக்கு 50 ரூபாய்க்குள் கிடைக்கும் என நினைக்கிறேன்.  யூ. எஸ்.பி. 2.0 கேபிள் கேட்டால் விலை அதிகமாக இருக்கும். நான் வாங்கியது யூ.எஸ்.பி 1.1 கேபிள் என்று நினைக்கிறேன்.

இந்த வேலைக்கு அது போதும்.

3.  டெஸ்க்டாப் கணினியில் முன்புறம் யூ.எஸ்.பி போர்ட் இல்லாதவர்கள் பென்டிரைவை சொருக எழுந்து நின்று கணியை திருப்பி கஷ்டப்படவேண்டாம்.  இந்த யூ.எஸ்.பி எக்ஸ்டென்ஷன் கேபிளை கணினியின் பின்புறத்தில் ஒரு முறை இணைத்துவிட்டு மறுமுனையை முன்பக்கம் இழுத்துவிட்டுவிட்டால்  பென்டிரைவை முன்பக்கமாகவே எளிதாக சொருகிக்கொள்ளலாம்.


நிறைய பிரெளசிங் சென்டர்களில்  4 போர்ட் யூ.எஸ்.பி ஹப்பைதான் (4 Port USB Hub) இந்த வேலைக்கு பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். அந்த ஹப்பின் கேபிள் நீளம் குட்டையாகத்தான் இருக்கும்.  அதனால் பிரச்சனை முழுதாக தீராது.  யூ.எஸ்.பி எக்ஸ்டென்ஷன் கேபிள்தான் சரி.

கீபோர்ட் / மெளஸ் வாங்கும்போது அதற்கு யூ.எஸ்.பி கனெக்ஷன் இருப்பதுபோல் வாங்கிவிட்டால் அவற்றை டெஸ்க்டாப் கேபினட்டில் இருந்து இரட்டை தூரத்திற்கு நீட்டி பயன்படுத்திக்கொள்ள இந்த எக்ஸ்டென்ஷன் கேபிள் உதவும்.

4.  அடோபி ஃபிளாஷிற்கு கடிவாளம் போட்ட ஃபயர்பாக்ஸ்!  பதிவில் கவனிக்க இன்னும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.

i).  இப்படி ஃபிளாஷ் வேண்டும்போதுதான் ஓடுவதால் தேவையில்லாமல் பைட்ஸ் நகலிறக்கம் (டவுன்லோடு) ஆகாது.  அதனால் ப்ரெளசிங் வேகமாக இருக்கும்.

ii).  எல்லோரும் அன்லிமிடட் பிராட்பேண்ட் பிளான் வைத்திருப்பதில்லை.  பெரும்பாலும் லிமிட்டெட் ஜி.பி பிளான்தான் வைத்து இருப்பார்கள்.  இந்த கட்டுரையில் சொன்னபடி செய்தால் ஜி.பி பயன்பாட்டை கட்டுப்படுத்தி மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கலாம்.

காசு மிச்சம்!

This article is also emailed in full to 437 Email subscribers.
If you want to add your email click here.

16 December, 2012

எப்படி எல்லாம் வேலை வாங்கறான் பாருங்க!

அவுட்சோர்சிங்கில் பலவிதங்கள் உள்ளன:

Offshoring :  வேலையை வெளிநாட்டுக்கு அனுப்பி முடித்துக்கொள்வது.

Nearshoring :  தூரத்தில் உள்ள வெளிநாடாக இல்லாமல் பக்கத்திலேயே இருக்கும் நாடுகளுக்கு வேலையை அனுப்புவது.

Twoshoring:    இதுல கொஞ்சம். அதுல கொஞ்சம் இருந்தால் நல்லது என்று நினைக்கிற கம்பெனிகள் சொந்த நாட்டில் ஒரு லொகேஷனையும், வெளிநாட்டில் ஒரு லொகேஷனையும் வைத்துக்கொள்வது.

Multishoring:  " ஒரே கூடையில் ஏன் இத்தனை முட்டை" சிந்தனை உள்ளவர்கள் வேலைகளை பல நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யும் வித்தை.

Rightshoring:  எந்த வேலை எங்கே மலிவாக செய்ய முடியுமோ,  அந்த நாட்டுக்கு அந்த வேலை என்று பிரித்துப் பார்த்து பகிரும் புத்திசாலித்தனம்.

In-shoring:  கம்பெனிகள், சொந்த நாட்டில் அவர்களின் செயல்பாட்டுகளை அதிகரித்து அதன்மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்புகளை பெருக்கும் போக்கு.

In-sourcing :   (அவுட்சோர்சிங்கிற்கு எதிர்ப்பதம்)  வெளிநாட்டுக்கு போன வேலைகளை மீண்டும் நம் நாட்டிற்கே கொண்டு வருவது.

Homesourcing: அலுவலகத்தில் செய்யும் வேலையை, தொழிலாளியின்  வீட்டுக்கே  கொடுத்து அனுப்புவது.

Unsourcing :  கஸ்டமர் சப்போர்ட்னு கம்பெனியை தேடி வருபவர்களை சோஷியல் நெட்வொர்க்குகளுக்கு அனுப்பி, அங்கே 'வாடிக்கையாளர்கள் நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் பதில் சொல்லி தீர்வு கண்டுகொள்ளுங்கள்' என்று கழண்டுகொள்ளும் சாதுர்யம்.

யாருக்கு எந்த source விருப்பமாக இருந்தாலும்,
எனக்கு பிடிச்சது ஒன்னுதான்.

ஓப்பன்Source!

If you want to add your email subsciption click here.

06 June, 2012

லினக்ஸ் கிண்டுவது எப்படி?

கதை கேளு கதை கேளு
லினக்சோட கதை கேளு

படம் பாரு படம் பாரு
லினக்ஸ் கெர்னல் படம் பாரு

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள். அப்படியென்றால் ஒரு வீடியோ?

லினக்ஸ் வளர்ச்சிக்காக செயல்படும் லினக்ஸ் பெளண்டேஷன் (லாபநோக்கமற்ற அமைப்பு), லினக்ஸ் உருவாகும் கதையை ஒரு அனிமேஷன் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.


அந்த யூட்யூப் வீடியோவின் சுட்டி இதோ..

http://www.youtube.com/watch?v=yVpbFMhOAwE

லினக்ஸ் என்பது ஒரு ஆபரேடிங் சிஸ்டம் என்று அறியப்பட்டாலும், அதன் முக்கிய பகுதியை லினக்ஸ் கெர்னல் (kernel) என்று சொல்வார்கள்.

ஒரு கட்டிடம் கட்டும்போது அஸ்திவாரம் மட்டும் போட்டுவிட்டு அதை கட்டிடம் என்று சொல்லமுடியாது. அதேபோல் லினக்ஸ் கெர்னல் மட்டுமே லினக்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் ஆகிவிடாது.

அதனுடன்  கிராபிகல் டெஸ்க்டாப், டிவைஸ் டிரைவர்கள், அப்ளிகேஷன்ஸ், இப்படி இன்னும் நிறைய சேர்த்தபிறகுதான் அதை நாம் ஆபரேடிங் சிஸ்டமாக பயன்படுத்த முடியும்.

பொதுவாக லினக்ஸ் கெர்னலை அடிப்படையாக பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டங்களை லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன்ஸ் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது.  உதாரணம்: உபுன்டு, லினக்ஸ் மின்ட், டெபியன், ரெட் ஹேட்.

லினக்ஸ் கெர்னலை மட்டும் குறிப்பிடும்போது லினக்ஸ் என்றும், லினக்சை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆபரேடிங் சிஸ்டங்களை GNU/லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன்ஸ் என்றும் சொல்வதுதான் சரி.

லினக்ஸ் போன்று மேலும் பல சுதந்திர மென்பொருள் கெர்னல்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ஃப்ரீ பி.எஸ்.டி (FreeBSD).

-----------------------------------------------

நான் எழுதிய சிறுகதை படித்தீர்களா?

வசீகரன் Vs. சிட்டி (Sci-Fi Thriller)

----------------------------------------------

தமிழ்மொழியில் வரும் எந்த ஒரு கணினி இதழையும் நான் காசு கொடுத்து வாங்கி படிப்பதில்லை.  எனக்கு தேவையான எல்லாமே இணையத்தில் கிடைத்துவிடுகிறது.

காசு மிச்சம்.

.

27 May, 2012

வசீகரன் Vs. சிட்டி (Sci-Fi Thriller)

காட்சி எண் 1

இடம்: சஞ்சனா வீட்டின் வரவேற்பறை.

ஊஞ்சலில் ஆடிக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்த 'சனா'விற்கு ஒரே ஒரு குழப்பம்தான். இளமை துள்ளும் வயதில் ஒரு பெண்ணுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?

காதல்தான்.

யாருடைய காதலை ஏற்றுக்கொள்வது?

வசீகரனா?

'Robot' சிட்டியா?

இந்த இரண்டில் யாரை மணமுடிப்பது?

தோழியின் வீட்டில்,  சந்தித்த அரை மணி நேரத்திலேயே அவள் மனதில் கன்டெய்னர் சைஸ் இடத்தை பிடித்துவிட்ட ஏற்றுமதி பிசினஸ் செய்யும் வசீகரனா?

அல்லது ஊட்டி மலைப்பாதையில் அவள் கார் ஓட்டிக்கொண்டு இறங்கும்போது,  அது பிரேக் பிடிக்காமல் விபத்தில் சிக்க,  தன் உயிரை!? பணயம் வைத்து சனாவை காப்பாற்றிய 'ரோபோ' சிட்டியா?

தன் அன்பு அப்பாவிடம் தன் விருப்பத்தை தெரிவித்தபோது அவர் சொன்ன ஒரு நிபந்தனை அவளின் குழப்பத்தை  மேலும் அதிகமாக்கியது.

"என்னம்மா? ஏதாவது முடிவெடுத்தியா?" கேட்டுக்கொண்டே வந்து டிவி பார்க்க அவளோடு ஊஞ்சலில் அமர்ந்தார் அப்பா ராஜசேகர்... பெல் கணினி நிறுவன முதலாளி... கோடீஸ்வரர்.

"அதைப்பத்திதான் யோசிக்கிறேன்பா. சொல்றேனே."

டிவியில் அஜீத் நடித்த 'அசல்' படத்திலிருந்து காட்சிகள் ஓடிக்கொண்டு இருந்தது. அஜீத்தும் வில்லனும் டேபிளில் பிரித்துப்போட்டு இருந்த துப்பாக்கியின் பாகங்களை யார் முதலில் அசெம்பிள் செய்து, மற்றவனை போட்டுத்தள்ளுவது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

அதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த சனாவிற்கு மனதில் ஒரு பொறி தட்ட, திரும்பி பக்கத்தில் இருந்த அப்பாவைப் பார்த்தாள்.  அதே காட்சியை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவும்  சனாவைப் பார்க்க....கணநேர நிசப்தம்.

மகள் சொல்லவந்ததை புரிந்துகொண்ட ராஜசேகர்...."அவங்களை நாளைக்கு மார்னிங் 10 மணிக்கு என்னை ஆபீஸ்லே வந்து பார்க்கச்சொல்லும்மா".

-------------------

காட்சி எண் 2

இடம் : பெல் நிறுவன அலுவலகம்.

பாத்திரங்கள்: சனா, அப்பா, வசீகரன், சிட்டி

அப்பா: "வெல்கம் எவரிபடி. என் டாட்டர் சனா எனக்கு ஒரே வாரிசு. அவள் இந்த லவ் மேட்டரை என்கிட்டே சொன்னபோது நான் ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டேன்.

எனக்குப் பிறகு என் பெண்ணை வைத்து நல்லா வாழறது மட்டும் இல்லே. இந்த பெல் நிறுவனத்தையும் யார் திறமையா மேனேஜ் செய்வாரோ, அவருக்குத்தான் நான் என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பேன்.

என் டாட்டரை விரும்புற உங்க ரெண்டு பேர்ல என் மாப்பிள்ளையாகப்போகும் அதிர்ஷ்டசாலி யார்னு கண்டுபிடிக்க ஒரு சின்ன போட்டி வைக்கப்போறேன்".

அந்த அறையின் ஒருபக்க சுவர் அப்படியே விலகுகிறது. பெல் நிறுவன பேக்டரியின் ஷாப் ஃப்ளோர் தெரிகிறது.

அப்பா தொடர்கிறார்: " உங்க ரெண்டு பேர்ல யார் ஒரு கம்ப்யூட்டரை அசெம்பிள் பண்ணி சனாவுக்கு "நான் உன்னைக் காதலிக்கிறேன்"னு முதலில் தமிழில் ஈமெயில் அனுப்புறாங்களோ, அவர்தான் என் மாப்பிள்ளை."

சனா இணைய வசதியுள்ள ஒரு பெல் லேப்டாப்புடன் ரெடியாக இருக்கிறாள்.

"உங்களுக்கு தேவையான பார்ட்ஸ் இந்த லிஸ்டில் இருக்கிறது. பிரச்சனை வந்தா, முடிவெடுக்க இங்கே எக்ஸ்பர்ட் பேனல்லே 10 பேர் இருக்காங்க. ஏமாத்த நெனச்சா டிஸ்குவாலிஃபை பண்ணிடுவேன். சரியா?"  பேசி முடித்தார் ராஜசேகர்.

சிட்டி: " ஸ்பீட் 1 Terra Hertz, மெமரி 1 Zetta Bytes,  நியூரல் நெட்வொர்க் எடிஷன் ரோபோவான எனக்கு இதெல்லாம் ஒரு விஷயமா?  வருங்கால மாமனாரே இப்படி match-ஐ எனக்கு சாதகமா fix செய்துடுவார்னு நான் கனவுலேகூட நினைக்கலே." சந்தோஷப்பட்டான் சிட்டி.

வேற ஏதாவது போட்டி வெச்சிருந்தாகூட வின் பண்ண சான்ஸ் இருக்கும். மெஷினுக்கு போட்டியா ஒரு கம்ப்யூட்டரை  அசெம்பிள் செய்து ஜெயிக்க சொல்றாரே இந்த ஆள்.  சரியான சைக்கோவா இருப்பானோ? .......இப்படி யோசித்துக்கொண்டு இருந்த வசீகரனுக்கு ஒன்றும் பேசமுடியவில்லை.

தன் குருவை நினைத்து அவரின் ஆசிகளை வேண்டிக்கொண்டே ஷாப் ஃப்ளோருக்கு வந்தார் வசீகரன். இரண்டு பேருக்கும் பார்ட்ஸ் லிஸ்டின் காப்பிகளை கொடுத்தார்கள்.

ஸ்டார்ட் சிக்னல் வந்தவுடன் ரோபோ சிட்டி சும்மா தீயா வேலை செய்தான்.

லேட்டஸ்ட் மதர்போர்டு, குவாட் கோர் பிராசசர், டிவிடி ரோம், 4 GB மெமரின்னு எல்லாம் லேட்டஸ்ட் அன்ட் கிரேட்டஸ்ட்டாப் பார்த்து எடுத்து, டவர் டைப் கேபினெட்டில் கடகடன்னு அசெம்பிள் பண்ணிக்கிட்டே இருந்தான் சிட்டி.

வசீகரன் அந்த லிஸ்டையே சில நொடிகள் பார்த்துக் கொண்டு இருந்தார். அதில் இருந்த ஒரு என்ட்ரி அவரை சற்றே யோசிக்க வைத்தது. பிறகுதான் வேலையை ஆரம்பித்தார்.

மதர்போர்டு ஸ்க்ரூவையெல்லாம் தன் இயந்திர கைகளைப் பயன்படுத்தி நொடிகளில் மாட்டிவிட்டு, பத்தே நிமிடங்களில் மெஷினை ரெடி செய்துவிட்டான் ரோபோ சிட்டி.

பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு ஆபரேடிங் சிஸ்ட்டத்தின் (OS) டிவிடியை டிரைவில் போட்டு பிசியை ஆன் செய்து இன்ஸ்டலேஷனுக்காக பூட் செய்ய ஆரம்பித்தான்.

சிட்டியின் பி.சி இன்னும் முக்கால் மணி நேரத்தில் உன் சிஸ்டம் ரெடியாகிவிடும் என்று சொல்லிவிட்டு டிவிடியில் இருந்த இன்ஸ்டலேஷன் ஃபைல்களை அசுர வேகத்தில் முழுங்க ஆரம்பித்தது.

சிட்டி பக்கத்தில் இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு வசீகரனை கண்காணிக்க ஆரம்பித்தான்.

வசீகரன் பார்ட்ஸை செலக்ட் செய்யும்போது இன்டெல் மதர்போர்டு, டூயல் கோர், 2 GB மெமரி இப்படி ஆவரேஜாத்தான் செலக்ட் செய்தார். ஸ்க்ரூடிரைவரை வைத்து மதர்போர்டு ஸ்க்ரூவை மாட்டயற்சிக்கும்போது கொஞ்சம் சிரமப்பட்டார்.

இரண்டாவது ஸ்க்ரூ எடுக்கும்போது சிட்டி வசீகரனைப் பார்த்து" என்ன மாப்ளே? நீ ஒரு ஸ்க்ரூ மாட்டினா 100 ஸ்க்ரூ மாட்னா மாதிரிதானே? அப்படித்தான் கேள்விப்பட்டேன்" என்று கிண்டலாக சொல்லிவிட்டு பேய் சிரிப்பு சிரித்தான். வசீகரன் அதை கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையில் சிட்டியின் PC  மதர்போர்டுக்கு, ஆடியோவுக்கு, நெட்வொர்க் கார்டுக்கு இப்படி ஒவ்வொன்னுத்துக்கும் டிரைவர் சாஃப்ட்வேர் கேட்க,  சிட்டி அந்தந்த டிரைவர் சிடியை தேடி எடுத்து ஒவ்வொன்னா கொடுத்து,  PC கேட்கும்போதெல்லாம் ரீஸ்டார்ட்டும் செய்துகொண்டு வந்தான் சிட்டி.

வசீகரன் கணினியை ரெடி செய்து முடித்தபோது, சிட்டியின் பிசி "இன்னும் 6 நிமிஷம்தான் பாக்கி பாஸ்" என்று கவுன்ட்டெளன் காண்பித்தது.

அப்போது வசீகரன் யாரும் எதிர்பாராத விதமாக ஷாப் ஃப்ளோரின் ஒரு மூலையை நோக்கி பார்ட்ஸ் லிஸ்டுடன் ஓட்டம் பிடித்தார். எல்லாருக்கும் ஷாக்.

இரண்டே நிமிடங்களில் அதே வேகத்தில் திரும்பி வந்த வசீகரனின் கையில் ஒரு டிவிடி இருந்தது. பேர் 'சுதந்திர OS லைவ் டிவிடி'. அதன் கவரில் மூன்றே மூன்று இன்ஸ்ட்ரக்ஷன்தான்.

1. BIOS-ல் Boot from DVD செட் செய்.

2. இந்த டிவிடியை வைத்து பூட் செய்.

3. இதை பயன்படுத்த முதலில் இன்ஸ்டால் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. முதலில் உபயோகித்து பார்த்துவிட்டு, பின்னால் வேண்டுமென்றால் hard disk-ல் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

வசீகரன் இந்த 3 பாயின்ட்களையும் கவனமாக புரிந்துகொண்டார்.

சிட்டியின் பிசி "எல்லாம் ஓவர். என்னை ஒருவாட்டி ரீஸ்டார்ட் பண்ணா போதும்னு" சொல்ல சிட்டி பிசியை ரீஸ்டார்ட் செய்தான்.

கிட்டத்தட்ட அதே நொடியில் வசீகரனும் தன் பிசியை சுதந்திர டிவிடி போட்டு 'On' செய்தார். Del கீ அழுத்தி Bios போய் 'Boot from DVD' செட் செய்து 'Save and exit' கொடுக்க வசீகரன் பிசி ரீஸ்டார்ட் ஆகியது.

சிட்டியின் பிசி "இப்பத்தான் நான் முதல் முறையா பூட் ஆகறேன். அதனால் சில செட்டிங் செய்ய வேண்டியிருக்கிறதுன்னு செட்டிங் செய்ய போய்விட்டது.

வசீகரனின் பிசி பூட் ஆனவுடன் இன்ஸ்டால் செய்ய வேண்டுமா? அல்லது try செய்து பார்க்க வேண்டுமா என்று கேட்டு நிற்க, வசீகரன் try செலக்ட் செய்தார்.

வசியின் பிசி, boot செய்யும்போதே மதர்போர்டு, ஆடியோ, வீடியோ, கீபோர்டு, மெளஸ், நெட்வொர்க் கார்டு இப்படி சகலத்துக்கும் டிவிடியில் இருக்கும் டிரைவர்களையே பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துவிட்டது.

இதனால் வசியின் பிசியில் 3 நிமிடத்திலேயே டெஸ்க்டாப் வந்துவிட்டது.

அதுவரை வசீகரனை நக்கலாக பார்த்துக்கொண்டு வந்த சிட்டி, வசீகரனின் பிசி மானிட்டரில் graphical டெஸ்க்டாப் வந்துவிட்டதை பார்த்தபிறகு டெரராகி அலறினான்.

"ஹே. வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர். இந்த ஆளு ஏதோ தில்லுமுல்லு செய்துருக்கான். இல்லாட்டி இவ்வளவு சீக்கிரம் எப்படி டெஸ்க்டாப் வரும்?

முதல்லே அவனை டிஸ்குவாலிஃபை பண்ணுங்க."

எக்ஸ்பர்ட் பேனலைப் பார்த்து கத்திய சிட்டியை அவர்கள் சட்டை செய்யவே இல்லை.

எக்ஸ்பர்ட் பேனல் ரியாக்ஷனே கொடுக்காததை பார்த்த சிட்டி அப்போதுதான் கவனித்தான். அவன் அப்பீல் செய்ய ஆரம்பித்தபோதோ அவனுக்கும் டெஸ்க்டாப் வந்து ரெடியாக இருக்கிறது என்பதை. சிட்டி உடனே அந்த ஆபரேடிங் சிஸ்டத்தின் பிரெளசரை டபுள் கிளிக் செய்ய, அது உடனே லோடாகியது.

சிட்டிக்கு முன்னேயே டெஸ்க்டாப் வந்துவிட்ட வசீகரன், 'இன்ஸ்டால் சுதந்திர OS' ஐகானை டபுள் கிளிக் செய்யவில்லை.  நேராக சுதந்திர பிரெளசரை ஓப்பன் செய்துவிட்டு ஜீமெயில் போய்விட்டார்.

ஜீமெயிலுக்கு உள்ளே போய், compose பட்டனை கிளிக் செய்து, இங்லீஷ் டு தமிழ் ட்ரான்ஸ்லிட்டரேஷனை activate செய்து, "naan unnai .." என்று ஆங்கில கீபோர்டில் அடித்து, கட் செய்து சப்ஜெக்ட் லைனில் பேஸ்ட் செய்தார் வசி.

ரோபோ சிட்டி தன் மெயில் அக்கவுண்டில் நுழையவும், இன்பாக்சில் "மாப்ளே, match fix ஆயிடுச்சு. கல்யாணத்துக்கு மறக்காம வந்துடு" என்று வசீகரன் ஈமெயிலிலிருந்து வந்த செய்தி வரவும் சரியாக இருந்தது.

வசீகரன் பக்கம் கிரீன் லைட்டும், தன் பக்கம் ரெட் லைட்டும் எரிந்ததை பார்த்த சிட்டிக்கு, வசீகரன் முந்திக்கொண்டு மெயில் அனுப்பிவிட்டதால் தான் தோற்றுப் போனது தெளிவாக புரிந்தது.

இந்த சுதந்திர ஆபரேடிங் சிஸ்டத்தின் Live DVD மட்டும் அந்த பார்ட்ஸ் லிஸ்டில் இருந்திருக்காவிட்டால், இந்த போட்டியில் ஜெயித்திருக்க முடியாது என்று வசீகரனுக்கு நன்றாக புரிந்தது.

அந்த டிவிடியை வசி கையில் எடுத்து நன்றியுடன் முத்தம் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத சிட்டி, தான் பயன்படுத்திய டிவிடியை வெறுப்புடன் எடுத்து ஒரே கையால் நொறுக்கிப் போட்டான்.

வசீகரனும் சனாவும் பாடுகிறார்கள்.

நீ சுதந்திரம் தந்த வரம் வரம்
கலந்திடுவோம் இனி நிதம் நிதம்.

கற்பனை, ஆக்கம்
மென்பொருள் பிரபு

Deleted Scenes.

போட்டி முடிந்தவுடன் நடந்த பிரஸ் கான்ஃபரன்சில் வசீகரன் சொன்னது.

கேள்வி: எக்ஸ்போர்ட் பிசினசில் இருக்கும் உங்களுக்கு இந்த சுதந்திர OS Live DVD  பத்தி எப்படி தெரிந்தது?   அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே.

வசீகரன்: எல்லாம் என் குருவோட ஆசீர்வாதம்தான். அவர் "யாருக்காகவும், எதுக்காகவும் உன் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காதே"ன்னு என்னிடம் அடிக்கடி சொல்வார். கணினி மென்பொருள்னு வந்தா, அதுலேயும் சுதந்திரம் கிடைக்குமா? என்று தேடினேன். கிடைத்தது. அப்படித்தான் சுதந்திர OS பற்றி தெரிந்துகொண்டேன்.

கேள்வி: அதை ஏன் சிட்டி பயன்படுத்தவில்லை?

வசீகரன்: அவருக்கு அதைப் பற்றியே தெரியவில்லை. 2 பேருக்கும் அதே பார்ட்ஸ் லிஸ்ட்தானே வந்தது. அந்த லிஸ்டில் சுதந்திர OS டிவிடி இருந்ததே.

கேள்வி: சிட்டி சுதந்திர OS செலக்ட் செய்து இருந்தால்?

வசீகரன்: அவர்தான் ஜெயித்திருப்பார். சந்தேகமேயில்லை.

16 April, 2012

மென்பொருள் செய்திகள் மூன்று


கூகுள் கைப்பற்றிய ஜீமெயில்!

எல்லா நாடுகளிலும் ஜீமெயில் முகவரி @gmail.com-னுதான் முடியும்.

ஆனால் இதுவரை ஜெர்மனியில் மட்டும் @googlemail.com-னுதான் இருந்தது. ஏன்னா G எழுத்தை தன் பேரில் முதல் எழுத்தாக வைத்திருந்த ஒருத்தன் அந்த பேரை ஜெர்மனியில் டிரேட்மார்க் செய்துவைத்திருந்தான்.

கூகுளும் எவ்வளவோ போராடிப் பார்த்தது. போன வாரம்தான் ஒரு வழியா அந்த பேரை வாங்கியது. பேரை விட்டுக்கொடுத்தவன் சும்மாவா கொடுத்திருப்பான்? இதுதான் சமயம்னு கன்னாபின்னான்னு மீட்டரை ஏத்தி இருக்கமாட்டானா?

இதேமாதிரி இங்கிலாந்திலேயும் இதே பேருக்காக கூகுள் 2010-ல் செட்டில்மென்ட் செய்தது.

சுதந்திர மைக்ரோசாஃப்ட்?!

"மைக்ரோசாப்ட் ஓப்பன் டெக்னாலஜிஸ் இன்க்" என்று ஒரு புதிய துணை நிறுவனத்தை (subsidiary) மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆரம்பித்து இருக்கிறது.

அது சில பல காரணங்களுக்காக கட்டற்ற மென்பொருள் சமூகத்துடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறது.

கட்டற்ற மென்பொருட்களுடன், தன் தனியுரிமை மென்பொருட்கள் சேர்ந்து சரியாக இயங்கும் வகையில் இந்த புதிய நிறுவனம் வழியாக மைக்ரோசாஃப்ட் முயற்சிகளை மேற்கொள்ளும்.

அப்படியே எம்.எஸ் ஆபீசின் ஃபைல் பார்மேட்டை கட்டற்ற மென்பொருளாக்கிவிட்டால் ஓப்பன்/லிபர்ஆபீஸை இன்னும் பலர் பயன்படுத்த முன்வருவார்கள். ஃபைல் பார்மேட் பிரச்சனையாலேயே நிறையபேர் ஓப்பன்/லிபர் ஆபீஸ் பயன்படுத்த தயங்குகிறார்கள்.

இப்போதைக்கு கிளவுட் கம்ப்யூட்டிங்தான் ஹாட் டாபிக்.

கிளவுட் ஆபரேடிங் சிஸ்டம் "ஓப்பன்ஸ்டாக்" ஒரு கட்டற்ற மென்பொருள். இதை பைத்தான் மொழியைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள்.

லினக்சுக்கு லினக்ஸ் பெளன்டேஷன் இருக்கிறது. அதைப்போல ஓப்பன்ஸ்டாக்கும் ஒரு பெளன்டேஷன் ஆரம்பிக்க ரெட்ஹேட், ஐ.பி.எம், யாஹூ!, டெல் உட்பட 19 கம்பெனிகள்** ஒருசேர முன்வந்து இருக்கிறார்கள்.

இன்டெர்நெட் வந்து நம் வாழ்க்கை முறையையே மாற்றின மாதிரி இந்த கிளவுட் கம்ப்யூட்டிங்கும் ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஓப்பன்ஸ்டாக் நிறுவனம் ஏப்ரல் 2012-ல் தங்களது 5வது பதிப்பை வெளியிட்டார்கள். அதற்கு செல்லப்பெயர் எஸ்ஸெக்ஸ்.

உபுன்டு மாதிரியே ஓப்பன்ஸ்டாக் பதிப்புகளுக்கும் ஏ, பி, சி, டின்னு வரிசையா பேர் வைத்து வருகிறார்கள்.

இதன் முதல் 4 பதிப்புகள்.

1. ஆஸ்டின்
2. பெக்ஸர்
3. காக்டஸ்
4. டையப்லோ.

ஓப்பன்ஸ்டாக்கின் அடுத்த ஆறாவது பதிப்புக்கு ஃபோல்ஸோம் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்த கிளவுட் கம்ப்யூட்டிங்குக்கு சரியான தமிழ் வார்த்தை கண்டுபிடிங்கப்பா.

**
பிளாட்டினம் உறுப்பினர்கள்: ஏ.டி&டி, கனோனிகல், ஹெச்.பி, ஐ.பி.எம், நெபுலா, ராக்ஸ்பேஸ், ரெட்ஹேட், சுசி

தங்க உறுப்பினர்கள்
: சிஸ்கோ, க்ளியர்பாத், க்ளவுட் ஸ்கேலிங், டெல், ட்ரீம்ஹோஸ்ட், ஐ.டி.ஆர்.ஐ, மிரான்டிஸ், மார்ப்லேப்ஸ், நெட்அப், பிஸ்டன் க்ளவுட் கம்ப்யூட்டிங், யாஹூ!

அனைவரும் படிக்க வேண்டிய மின்புத்தகம்.

அர்த்தமுள்ள அனுபவங்கள் மின்புத்தகம்

நடைமுறை வாழ்க்கையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, ஆனால் இதுவரை யாரும் எனக்கு சொல்லாத விஷயங்களை இந்த மின்புத்தகம் படித்து தெரிந்துகொண்டேன்.  இதை முழுதாக படிப்பவர்கள் மனம் தெளிவுபெறும்.  மன நிம்மதி கிடைக்கும்.
.

20 February, 2012

நடிகர் வடிவேலு மைக்ரோசாஃப்ட் தலைவராக ஆனால்.....


இடம் : எம்.டி. ரூம்.

வடிவேலு டேபிள் சேரில்  உட்கார்ந்து இருக்கிறார்.

கதவை தட்டிவிட்டு பார்த்திபன் உள்ளே வருகிறார்.

பார்த்திபன்: ( பணிவுடன்)  சார், நான் மெளனம் அட்வர்டைசிங் ஏஜென்சியிலிருந்து வந்திருக்கேன்.

வடிவேலு:  (நெற்றியை சுருக்கி பார்த்திபனை பார்த்தவாறே)..  விளம்பர கம்பெனின்றீங்க ...ஆனா பேரே ஒரு தினுசா இருக்கே... சரி. வாங்க. உட்காருங்க.

பார்த்திபன்:  சார், உங்க கம்பெனி புராடக்ட் லோகோ புதுசு வேணும்னு சொன்னீங்களாம்.  நீங்க என்ன புராடக்ட் டீல் பண்ணுறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

வடிவேலு: (பார்த்திபனை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே) தொழிலுக்கு புதுசா?.....அது  விண்டோஸ்.

பார்த்திபன்: (சற்றே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு) சார். இங்கே நான் சாத்திட்டு வந்த டோர் மட்டும்தான் இருக்கு. ஒரு விண்டோஸைக்கூட காணோமே!

வடிவேலு: (முகத்தில் ஷாக்...) இது ஏசி ரூம். அதான் இதுலே விண்டோஸ் இல்லை. (அப்புறம் சுதாரித்துக்கொண்டு).... நான் சொன்னது விண்டோஸ் சாப்ட்வேர்.

பார்த்திபன்:  அப்படியா சார்? சாரி.  நான் வேற மாதிரி நெனச்சுக்கிட்டேன். சரி. உங்க லோகோவை காமிங்க.

வடிவேலு காட்டுகிறார்:

Picture 1

பார்த்திபன் அதை முன்னே -பின்னே- மேலே -கீழே என்று பலவிதமாக ஆச்சரியத்துடன் பார்க்கிறார். பிறகு " விண்டோஸ்னு சொல்றீங்க ஆனா எதுக்கு இதுலே காத்துலே அசையுறா மாதிரி கொடியெல்லாம் இருக்கே?

வடிவேலு:  (முகத்தில் டபுள் ஷாக்.. வாய் குழறுகிறது.)  அது.. அதது... இவ்வளவு நாள் அப்படித்தான்பா இருந்தது.

பார்த்திபன்: (விடாப்பிடியாக) அதெப்படி சார். விண்டோஸ்னு சொல்றீங்க. அப்படின்னா இந்த லோகோவுலே கொடி எதுக்கு?  கொடி அசைய காத்து எங்கே இருந்து வந்தது?ன்னு நாலு பேர் கேட்க மாட்டாங்களா?

வடிவேலு: (விட மாட்டான் போல இருக்கேன்னு மனதுக்குள் நினைத்துக்கொண்டே..)  சரிப்பா... அதுக்கு இப்ப என்ன பண்றது?

பார்த்திபன்: கொடி அனிமேஷனை தூக்கிடலாம் சார். இந்த குழப்பம்லாம் இல்லாம போயிடும்.

வடிவேலு:  (சற்றே ஆறுதல் அடைந்தவராக)..." அப்படியா சொல்ற?.. சரி.... தூக்கிடு."

பார்த்திபன் உடனே தன் டேப்லட் கணினியில் Picture 1 லோகோவில்,  பறக்கும் கொடி எஃபக்ட் இல்லாமல் மாற்றங்கள் செய்து Picture 2-வை காண்பிக்கிறார்

Picture 2

வடிவேலு:  (முகத்தில் திருப்தியுடன்) சரிப்பா.. இனிமே இதையே வச்சிக்கலாம்.

பார்த்திபன்: நான் அப்படி சொன்னேனா சார்!

வடிவேலு: ( திடுக்கிட்டு) நீதானேப்பா இப்ப சொன்னே.  கொடி.. காத்து. அனிமேஷன்.. அதெல்லாம் தூக்குறதுக்கு சரின்னு சொன்னேனேப்பா.

பார்த்திபன்: சார். அவசரப்படாதீங்க. அதில் ஒரு விஷயம் இருக்கு.

வடிவேலு: (மெதுவாக நிமிர்ந்து, டேபிளில் பார்த்திபன் பக்கம் சாய்ந்து.. )....இப்ப என்ன சொல்ல வரே...?

பார்த்திபன் உடனே தான் கொண்டுவந்த டேப்லட்டில் ஆப்பிள் லோகோவை சர்ச் செய்து எடுத்து வடிவேலுக்கு காண்பிக்கிறார்.

பார்த்திபன்: சார். ஆப்பிளும் ஒரு கலர்ஃபுல் ஆபரேடிங் சிஸ்டம்தான். அதுக்குன்னு சின்னபிள்ளைத்தனமா,  இருக்குற எல்லா கலரையுமா அவுங்க லோகோவுலே அப்பி டிசைன் செய்து இருக்காங்க? வெறும் சில்வர் கலர் மட்டும்தானே யூஸ் பண்ணி இருக்காங்க?

வடிவேலு: ( சிறிது யோசனையுடன்) ஆமாம். நீ சொல்றது கரெக்டுதான். நம்ம லோகோ ஆப்பிள் லோகோவை விட டாப்பா வரணும்.

பார்த்திபன்: "அதுக்குத்தான் சார் சொல்றேன். "

"இப்ப இருக்கும் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் எல்லா கலரையும் தூக்கிடலாம். "

"வானும் நீலம். கடலும் நீலம். வானத்துலே இருந்து ராக்கெட்ல பார்த்தா பூமியும் நீலம்.

"அதானால உலகம் பூரா மார்க்கெட்டை புடிச்சி இருக்கிற நம்ம விண்டோஸ் லோகோவுக்கு நீல நிறம் கொடுத்தா கச்சிதமா இருக்கும் சார்! "  

மிகுந்த ஆர்வத்துடன் இப்படி சொல்லிவிட்டு,  Picture 2 லோகோவை பார்த்திபன் நீல கலருக்கு மாற்றிவிட்டு, வடிவேலுக்கு Picture 3 காட்டுகிறார்.

Picture 3

இதுதான் மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ள புதிய விண்டோஸ் 8 லோகோவடிவேலு: (மிகுந்த சந்தோஷத்தில் சேரைவிட்டு எழுந்து வந்து பார்த்திபனை கட்டித் தழுவி) ஆஹா! என்ன  ஒரு மேஜிக்கு.  என்ன ஒரு லாஜிக்கு.   நீ மட்டும் என் கண்ணுலே 25 வருஷத்துக்கு முன்னாலேயே பட்டிருந்தே வையி....

பார்த்திபன்: (அசராமல்  இடைமறித்து)  சார்.. இன்னும் உங்க விண்டோசோட புது வெர்ஷனை எனக்கு காமிக்கவேயில்லையே சார்.

வடிவேலு:   ஆங்.., பாத்தியா. எமோஷன்லே அதை மறந்துட்டேன். பாரு.. நல்லா பாரு...: என்று சொல்லி தன் விண்டோஸ் 8 புது வெர்ஷன் ஓடும் தன் லாப்டாப்பை பார்த்திபனிடம் அக்கறையுடன் தருகிறார்.

பார்த்திபன் அதை கையில் வாங்கி பார்க்கிறார்.  என்னென்னமோ செய்து பார்க்கிறார்.  கீயை தட்டி பார்க்கிறார்.  ட்ராக்பேடை விரலால் தேய்த்துப் பார்க்கிறார்.

வடிவேலுக்கு ஒன்னும் புரியவில்லை.  "என்னடா இவன் நேரா வந்தான். அதை தூக்கு.  இதை தூக்குன்னு சொன்னான்.  இவன் சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டி தப்பு பண்ணிட்டோமோ?"ன்னு மனதுக்குள்  நினைத்துக்கொண்ட வடிவேலுக்கு பெரும் குழப்பமே வந்துவிட்டது.

இருந்தாலும் "சரி.  இவ்வளவு நேரம் பொறுத்துட்டோம். கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்னு "  நினைத்துக்கொண்டார்.  குரலை கொஞ்சம் கனிவாக்கிக்கொண்டு, " அப்படி என்ன அதுல தேடறீங்க. தெரிஞ்சுக்கலாமா? என்று கேட்டார்.

ஒரு வித கலவரத்துடன் தலையை நிமிர்த்தி வடிவேலுவை பார்த்த பார்த்திபன், " சார்... நானும் எவ்வளவோ தேடிட்டேன். ஒரு விண்டோவைக்கூட இந்த விண்டோஸ் 8-லே என்னால கண்டுபிடிக்க முடியலே.  எல்லாம் ஒரே டைல்ஸா இருக்கு.  வேணும்னா இதுக்கு "டைல்ஸ் 8"-ன்னு பேர் வைச்சுடலாமா சார்?"னு சீரியசாக கேட்க,

விண்டோஸ் 8 ஸ்க்ரீன்ஷாட்
 
நிலைமையின் விபரீதம் புரிந்து வடிவேலுக்கு உலகமே சுற்ற ஆரம்பித்துவிட்டது.

" அய்யய்யோ... 25 வருஷமா கட்டிக்காத்து வந்த பிராண்ட் பேரை மாத்தச் சொல்றானே.  ஒரே ஒரு லோகோவை வச்சிகினு இப்படி புரட்டி எடுக்கறானே.   என்னால தாங்க முடியலேடா.  நான் எங்கனா போய் நிம்மதியா இருந்துக்குறேன். தயவு செய்து என்னை விட்டுடுடா"ன்னு அலறிக் கொண்டே அந்த பில்டிங்கை விட்டு ஓடியவர்தான்.  இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

வடிவேலு இருக்கும்  இடம் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்..

ஆக்கம், கற்பனை

மென்பொருள் பிரபு.


Apple Name and logo Registered Trade marks of Apple inc.
Windows name and logo Registered trade mark of Microsoft Inc. 
Names and logos  used under fair use policy.
Other picture's trademarks/copyrights acknowledged.

This is a pure imagination.

17 February, 2012

ஆப்பிளின் "நான் அவனில்லை"


கடந்த வருடம் பிப்ரவரியில்,  சிலிக்கான் வாலி ஜாம்பவான்களோடு நடந்த ஒரு டின்னரில், அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா உள்நாட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கும் எண்ணத்துடன் ஸ்டீவ் ஜாப்பிடம், ' உங்க ஆப்பிள் ஐபோனை  அவுட்சோர்ஸ் செய்யாமல் ஏன் அமெரிக்காவிலேயே தயாரிக்கக்கூடாது?  " என்று வெள்ளந்தியாக கேட்கப்போக,  அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் "அந்த வேலையெல்லாம் போனது போனதுதான்.  திரும்பி வராது' என்று  நாக் அவுட் கொடுத்து நடையை கட்டிவிட்டாராம்.

"ஐபோன் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை ஆகிறது.  ஐபோனை சிறந்த முறையில் வடிவமைப்பதுதான் எங்கள் வேலை. அதை அமெரிக்காவில் உற்பத்தி செய்து அந்நாட்டின் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்ப்பது எங்கள் வேலை இல்லை " என்று விளக்கம் கொடுக்கிறார் ஆப்பிளின் அதிகாரி ஒருவர்.

வேலைகளை அவுட்சோர்சிங் செய்து, கொழுத்த லாபத்தை ருசி காணும்  அமெரிக்க கம்பெனிகள்,  ஓபாமா சொல்வதை அப்படியே செயல்படுத்தி நஷ்டப்படும்  அளவுக்கு 'இளிச்சவாயர்களா' என்ன? 

இருந்தாலும், அமெரிக்காவை விட்டு வெளிநாட்டுகளுக்குப் போய்விட்ட வேலைகளை,  திரும்ப கொண்டு வந்து பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதே என் இலக்கு  என்று  ஓபாமா (வேறு வழியில்லாமல்) ஓங்கி குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

ஏனென்றால் இது அமெரிக்காவில் தேர்தல் வருடம்!

கொள்ளை லாபம் அடிக்கும் கம்பெனிகள் ஒருபுறம். அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் மறுபுறம்.

இந்த நிலையில் ஓபாமா வீசும் இந்த வலையில் புதிய வேலைகள் கிடைக்கிறதோ இல்லையோ,   ஓட்டுகள் கணிசமாக சிக்கலாம். :)

--------------------------------------------------------------------------------------

Related: இந்தியர் விசாக்கள் அதிகமாக நிராகரிக்கப்பட்டது ஒபாமா ஆட்சியில்தான்!


Photo Copyright Notice
Creative Commons
Except where otherwise noted, content on this site is licensed under a Creative Commons Attribution 3.0 License. Content includes all materials posted by the Obama-Biden Transition project. Visitors to this website agree to grant a non-exclusive, irrevocable, royalty-free license to the rest of the world for their submissions to Change.gov under the Creative Commons Attribution 3.0 License.

http://change.gov/about/copyright_policy

14 February, 2012

ஆப்பிள் > (கூகிள் + மைக்ரோசாப்ட்)! எப்படி?


ஒரு கம்பெனியின் வலிமையை எடைபோட பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மார்கெட் கேப்பிடலைசேஷன்.

முதலில் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் என்றால் என்ன? என்று பார்ப்போம்.

ஒரு பங்கின் சந்தை விலையை, அந்த கம்பெனி வெளியிட்டுள்ள மொத்த ஷேர்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் வரும் தொகைதான் மார்க்கெட் கேப்பிடலைசேஷன்.  சுருக்கமாக மார்க்கெட் கேப்.

மார்கெட் கேப் = ஒரு பங்கின் விலை x மொத்த பங்குகளின் எண்ணிக்கை.

ஆப்பிள் கம்பெனியின் ஷேர் சக்கை போடு போட்டுகொண்டு இருக்கிறது.

2012 பிப்ரவரி 10ஆம் தேதி நாஸ்டாக் சந்தை மூடும்போது ஒரு ஆப்பிள் ஷேர் $493 ஆக இருந்தது. மார்க்கெட் கேப் கணக்கு போட்டால் $460 பில்லியன் வருகிறது.

அன்றைய தேதியின் மைக்ரோசாப்ட் மார்கெட் கேப்பையும், கூகிளின் மார்கெட் கேப்பையும் ஒருசேர கூட்டினால்கூட அது ஆப்பிளின் மார்கெட் கேப்பை தொட முடியவில்லை.

கூகிள் மார்கெட் கேப்......................$197 பில்லியன்கள்

மைக்ரோசாப்ட் மார்கெட் கேப்............$256 பில்லியன்கள்

மொத்தம்....................................$453 பில்லியன்கள்

ஆப்பிள் மார்கெட் கேப் மட்டும்......$460 பில்லியன்கள்

அரசு நடத்தாத கம்பெனிகளில் அதிக மார்கெட் கேப் உலக அளவில் ஆப்பிளுக்குதான். ஆயில் கம்பெனி எக்சனுக்கு இரண்டாவது இடம்தான் ($397 பில்லியன்கள்).

பில்லியன் = 10^9
டிரில்லியன் = 10^12

1000 பில்லியன் = 1 டிரில்லியன்.

மார்கெட் கேப்பில் அரை டிரில்லியன் டாலர்களை தொடப்போகும் முதல் தனியார் கம்பெனியாக ஆப்பிள் சாதனை படைக்கப்போகிறது.

மார்கெட் கேப்பை வைத்துப் பார்த்தால் பிளாக்பெர்ரி தயாரிக்கும் ரிசர்ச் இன் மோஷன் கம்பெனியைவிட ஆப்பிள் சுமார் 50 மடங்கு பெரியது.

இன்றைய விலை:

ஆப்பிள்
கூகிள்
ஃமைக்ரோசாப்ட் 

பங்கு சந்தைகளில் "எது மேலே போகிறதோ கீழே வந்தே தீரவேண்டும்" என்று சொல்வார்கள். (What goes up must come down). 

அந்த விதிக்கு  ' ஆப்பிள்' மட்டும் ஒரு விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?

பின்குறிப்பு: இந்த கட்டுரை வெளியிடும் நேரத்தில் ஆப்பிளின் ஒரு பங்கின் விலை $500-ஐ தாண்டி விட்டது.
back to top