19 April, 2017

மைக்ரோசாஃப்டின் தட்டுங்கள்! திறக்கப்படும்!

மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா?

அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும்.

உதாரணத்திற்கு மைக்ரோசாஃப்டின் ஹாட்மெயில்/அவுட்லுக் மின்னஞ்சலை எடுத்துக்கொள்வோம். உங்கள் மேசைக்கணினி அல்லது மடிக்கணினியில் அந்த கணக்கில் உள்நுழைய பயனர் பெயர் டைப்படித்தபின் கடவுச்சொல்லடிக்க தேவை ஏற்படாமல் உங்கள் திறன்பேசிக்கு "உங்களின் இந்த பெயருள்ள மின்னஞ்சலுக்குள் இப்போது செல்ல வேண்டுமா? இல்லையா?" என்று கேட்டு ஒரு அறிவிப்பு வரும்.

அந்த அறிவிப்பில் வேண்டும் என்று தேர்வு செய்து தட்டினால் கடவுச்சொல் அடிக்க தேவையில்லாமல் மின்னஞ்சலுக்குள்ளே போய்விடலாம்.

இந்த வசதி உங்களுக்கு தேவை என்றால் உங்கள் திறன்பேசியில் "மைக்ரோசாப்ஃட் ஆதென்டிகேட்டர்" (Microsoft Authenticator) அப்பை நிறுவி உங்கள் மின்னஞ்சலை அது சொல்லும் வழிமுறைப்படி (Enable phone sign-in) சேர்த்துக்கொள்ளவேண்டும்.

"நான் தட்டி வைக்கறவன் இல்லை. தயங்காமல் அடித்துவிடுற வகை ஆள்" என்றாலும் அதற்கும் வழி இருக்கிறது. கணினியில் பயனர் பெயர், கடவுச்சொல் அடித்தபிறகு அது போதாமல் இந்த அப் ஒரு "ஒருமுறை கடவுச்சொல்" (OTP) கொடுக்குமாறும் வழி செய்துகொள்ளலாம்.

உங்கள் திறன்பேசியை "விளையாடத் தா" என்று உங்கள் குழந்தைகளோ, வயதானதால் மறுபடியும் குழந்தைகளாகவே மாறிவிட்ட பெற்றோர்களோ வாங்கிச்சென்றுவிட்டால், பழையபடி கடவுச்சொல் மட்டும் கொடுத்து உள்நுழையும் வசதியை எடுத்துவிடாமல் மைக்ரோசாப்ஃட் இன்னும் அப்படியே வைத்துள்ளது.

இந்த செயலியை நிறுவ..

மைக்சோஃப்ட் திறன்பேசிக்கு..

https://play.google.com/store/apps/details?id=com.azure.authenticator

ஆன்ட்ராய்ட் திறன்பேசிக்கு..

https://play.google.com/store/apps/details?id=com.azure.authenticator

ஐபோன் திறன்பேசிக்கு..

https://itunes.apple.com/app/id983156458

என் மின்னஞ்சல் முகவரி.

மென்பொருள்.பிரபு@suthanthira-menporul.com
 
Just copy and paste on email receiver field.

09 March, 2017

கூகிள் அதன் 'கீப்'பை என்ன செய்தது தெரியுமா?


சுருக்கமா சொல்லனும்னா கூகிள் கீப்  {keep.google.com} ஒரு எவர்நோட் {https://evernote.com/} மாதிரியான ஒரு note-taking சேவை.

கூகிள் கீப்பைவிட ஆற்றல் மிகுந்த சேவைகள் இருந்தாலும் அதற்காக இன்னொரு கணக்கு ஆரம்பிப்பதற்கு பதில் கீப்பையே பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.

என் கணிப்பில் 'இது பரவாயில்லை'.

இலவச சேவையான கீப்புக்கு அப்படி ஒன்றும் பெரிய வரவேற்பில்லை என்றாலும் கூகிள் இதை கைவிடாமல் பராமரித்துக்கொண்டு வந்தது.

கூகிள், பிப்ரவரி 2017-ல் கீப்பை தன் ஜி-ஸ்வீட் கட்டண சேவையின் {gsuite.google.com} ஒரு அங்கமாக சேர்த்துக்கொண்டது. இதனால் நமக்கு எந்த லாபம் இல்லையென்றாலும் ஜி-ஸ்வீட் கட்டண சேவையை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இது கூடுதல் வசதிதான்.

நீங்கள் மைக்ரோசாஃப்ட் வேர்டுக்கு பதில் கூகுள் டாக்ஸ் {docs.google.com} பயன்படுத்துபவராக இருந்தால் அவசரத்தில் கீப்பில் கிறுக்கியதை டாக்சுக்கும், பொறுமையாக டாக்சில் எழுதியதை கீப்புக்கும்,  இழுத்துக்கொள்ள முடியும்.


இந்த குறிப்பிட்ட வசதி கீப், டாக்சின்  இலவச சேவைகளிலும் வேலை செய்கிறது.

குறிப்புகள் எழுதுவது, பட்டியல் போடுவது, ஞாபகப்படுத்துதல், பேசப்பேச அதை எழுத்துகளாக மாற்றிக்கொடுக்கும் வசதி, படத்தில் இருக்கும் எழுத்துகளை பிரித்தெடுக்கும் வேலை இப்படி பல செயல்களுக்கு நாம் கூகிள் கீப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கீப்புக்கு ஆன்ட்ராய்ட் அப், ஐஓஎஸ் அப் இரண்டும் இருக்கிறது.

உலவி வழியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

07 March, 2017

ஜி-ஸ்வீட் ஜிமெயிலின் "வரும்.. ஆனா போகாது" சலுகை!

சமீபத்தில் கூகிள் நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

அதாவது ஜிமெயிலில் உள்வரும் மின்னஞ்சல்களில் இணைப்பு கோப்புகள் இருந்தால் {அட்டாச்மென்ட் ஃபைல்ஸ்} அந்த இணைப்பின்/இணைப்புகளின் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவு {ஒரு மின்னஞ்சலுக்கு} முன்பு இருந்த 25 எம்.பியிலிருந்து 50 எம்.பியாக அதிகரிக்கப்படுவதாக சொல்லியிருந்தது.

இதில் உள்ள நுணுக்கத்தை கவனித்தே ஆகவேண்டும். {சாதாரணமாக} 50 எம்.பி வரை கோப்புகளை இணைத்து ஜிமெயில் பயனி ஒரு மின்னஞ்சலை பிறருக்கு அனுப்ப முடியாது {பெறுபவர் இன்னொரு ஜிமெயில் பயனியாக இருந்தால்கூட!}. ஏனென்றால் வெளியே போகும் ஜிமெயில் மின்னஞ்சலின் இணைப்பு கோப்புகளின் அதிகபட்ச அளவு பழையபடி இன்னும் 25 எம்.பியாக மட்டுமே இருக்கிறது.

வேறு யாராவது அப்படி அனுப்பினால் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வளவே.

25 எம்.பிக்கு மேல் அளவுள்ள கோப்புகளை இணைப்பாக அனுப்ப வேண்டும் என்றால் ஜிட்ரைவின் {drive.google.com} உதவியுடன் {லிங்க்காக} அனுப்ப வழிமுறை இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் இந்த கூகிளின் அறிவிப்பு எல்லா ஜிமெயில் பயனிகளுக்கும் பொருந்தும் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனென்றால்  கூகுளின் "ஜி-ஸ்வீட்"டுக்கு காசு கொடுத்து ஜிமெயிலை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் {Gmail users under Gsuite paid service https://gsuite.google.com/} .

இலவச ஜிமெயில் பயனிகளுக்கும் இது பொருந்தும் என்று கூகிள் எங்கேயும் சொல்லவில்லை. கூகுளுக்கு விருப்பம் இருந்தால் ஒருவேளை இந்த சலுகையை இலவச ஜிமெயிலுக்கும் நீட்டிக்கலாம். ஆனால் உறுதியில்லை.

இலவச ஜிமெயிலிலும் இந்த சலுகை அறிமுகம் ஆகிவிட்டதா?  என்பதை பார்க்க நமக்கு நாமே 25 எம்.பிக்கு மேல் அளவுள்ள இணைப்பை அனுப்பி பரிசோதித்துக்கொள்ளலாம்.

அருஞ்சொற்பொருள்:
Passenger = பயணி {பயணம் செய்பவர் பயணி}
User = பயனி {பயன்படுத்துபவர் பயனி}

back to top