20 February, 2012

நடிகர் வடிவேலு மைக்ரோசாஃப்ட் தலைவராக ஆனால்.....


இடம் : எம்.டி. ரூம்.

வடிவேலு டேபிள் சேரில்  உட்கார்ந்து இருக்கிறார்.

கதவை தட்டிவிட்டு பார்த்திபன் உள்ளே வருகிறார்.

பார்த்திபன்: ( பணிவுடன்)  சார், நான் மெளனம் அட்வர்டைசிங் ஏஜென்சியிலிருந்து வந்திருக்கேன்.

வடிவேலு:  (நெற்றியை சுருக்கி பார்த்திபனை பார்த்தவாறே)..  விளம்பர கம்பெனின்றீங்க ...ஆனா பேரே ஒரு தினுசா இருக்கே... சரி. வாங்க. உட்காருங்க.

பார்த்திபன்:  சார், உங்க கம்பெனி புராடக்ட் லோகோ புதுசு வேணும்னு சொன்னீங்களாம்.  நீங்க என்ன புராடக்ட் டீல் பண்ணுறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

வடிவேலு: (பார்த்திபனை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே) தொழிலுக்கு புதுசா?.....அது  விண்டோஸ்.

பார்த்திபன்: (சற்றே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு) சார். இங்கே நான் சாத்திட்டு வந்த டோர் மட்டும்தான் இருக்கு. ஒரு விண்டோஸைக்கூட காணோமே!

வடிவேலு: (முகத்தில் ஷாக்...) இது ஏசி ரூம். அதான் இதுலே விண்டோஸ் இல்லை. (அப்புறம் சுதாரித்துக்கொண்டு).... நான் சொன்னது விண்டோஸ் சாப்ட்வேர்.

பார்த்திபன்:  அப்படியா சார்? சாரி.  நான் வேற மாதிரி நெனச்சுக்கிட்டேன். சரி. உங்க லோகோவை காமிங்க.

வடிவேலு காட்டுகிறார்:

Picture 1

பார்த்திபன் அதை முன்னே -பின்னே- மேலே -கீழே என்று பலவிதமாக ஆச்சரியத்துடன் பார்க்கிறார். பிறகு " விண்டோஸ்னு சொல்றீங்க ஆனா எதுக்கு இதுலே காத்துலே அசையுறா மாதிரி கொடியெல்லாம் இருக்கே?

வடிவேலு:  (முகத்தில் டபுள் ஷாக்.. வாய் குழறுகிறது.)  அது.. அதது... இவ்வளவு நாள் அப்படித்தான்பா இருந்தது.

பார்த்திபன்: (விடாப்பிடியாக) அதெப்படி சார். விண்டோஸ்னு சொல்றீங்க. அப்படின்னா இந்த லோகோவுலே கொடி எதுக்கு?  கொடி அசைய காத்து எங்கே இருந்து வந்தது?ன்னு நாலு பேர் கேட்க மாட்டாங்களா?

வடிவேலு: (விட மாட்டான் போல இருக்கேன்னு மனதுக்குள் நினைத்துக்கொண்டே..)  சரிப்பா... அதுக்கு இப்ப என்ன பண்றது?

பார்த்திபன்: கொடி அனிமேஷனை தூக்கிடலாம் சார். இந்த குழப்பம்லாம் இல்லாம போயிடும்.

வடிவேலு:  (சற்றே ஆறுதல் அடைந்தவராக)..." அப்படியா சொல்ற?.. சரி.... தூக்கிடு."

பார்த்திபன் உடனே தன் டேப்லட் கணினியில் Picture 1 லோகோவில்,  பறக்கும் கொடி எஃபக்ட் இல்லாமல் மாற்றங்கள் செய்து Picture 2-வை காண்பிக்கிறார்

Picture 2

வடிவேலு:  (முகத்தில் திருப்தியுடன்) சரிப்பா.. இனிமே இதையே வச்சிக்கலாம்.

பார்த்திபன்: நான் அப்படி சொன்னேனா சார்!

வடிவேலு: ( திடுக்கிட்டு) நீதானேப்பா இப்ப சொன்னே.  கொடி.. காத்து. அனிமேஷன்.. அதெல்லாம் தூக்குறதுக்கு சரின்னு சொன்னேனேப்பா.

பார்த்திபன்: சார். அவசரப்படாதீங்க. அதில் ஒரு விஷயம் இருக்கு.

வடிவேலு: (மெதுவாக நிமிர்ந்து, டேபிளில் பார்த்திபன் பக்கம் சாய்ந்து.. )....இப்ப என்ன சொல்ல வரே...?

பார்த்திபன் உடனே தான் கொண்டுவந்த டேப்லட்டில் ஆப்பிள் லோகோவை சர்ச் செய்து எடுத்து வடிவேலுக்கு காண்பிக்கிறார்.

பார்த்திபன்: சார். ஆப்பிளும் ஒரு கலர்ஃபுல் ஆபரேடிங் சிஸ்டம்தான். அதுக்குன்னு சின்னபிள்ளைத்தனமா,  இருக்குற எல்லா கலரையுமா அவுங்க லோகோவுலே அப்பி டிசைன் செய்து இருக்காங்க? வெறும் சில்வர் கலர் மட்டும்தானே யூஸ் பண்ணி இருக்காங்க?

வடிவேலு: ( சிறிது யோசனையுடன்) ஆமாம். நீ சொல்றது கரெக்டுதான். நம்ம லோகோ ஆப்பிள் லோகோவை விட டாப்பா வரணும்.

பார்த்திபன்: "அதுக்குத்தான் சார் சொல்றேன். "

"இப்ப இருக்கும் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் எல்லா கலரையும் தூக்கிடலாம். "

"வானும் நீலம். கடலும் நீலம். வானத்துலே இருந்து ராக்கெட்ல பார்த்தா பூமியும் நீலம்.

"அதானால உலகம் பூரா மார்க்கெட்டை புடிச்சி இருக்கிற நம்ம விண்டோஸ் லோகோவுக்கு நீல நிறம் கொடுத்தா கச்சிதமா இருக்கும் சார்! "  

மிகுந்த ஆர்வத்துடன் இப்படி சொல்லிவிட்டு,  Picture 2 லோகோவை பார்த்திபன் நீல கலருக்கு மாற்றிவிட்டு, வடிவேலுக்கு Picture 3 காட்டுகிறார்.

Picture 3

இதுதான் மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ள புதிய விண்டோஸ் 8 லோகோவடிவேலு: (மிகுந்த சந்தோஷத்தில் சேரைவிட்டு எழுந்து வந்து பார்த்திபனை கட்டித் தழுவி) ஆஹா! என்ன  ஒரு மேஜிக்கு.  என்ன ஒரு லாஜிக்கு.   நீ மட்டும் என் கண்ணுலே 25 வருஷத்துக்கு முன்னாலேயே பட்டிருந்தே வையி....

பார்த்திபன்: (அசராமல்  இடைமறித்து)  சார்.. இன்னும் உங்க விண்டோசோட புது வெர்ஷனை எனக்கு காமிக்கவேயில்லையே சார்.

வடிவேலு:   ஆங்.., பாத்தியா. எமோஷன்லே அதை மறந்துட்டேன். பாரு.. நல்லா பாரு...: என்று சொல்லி தன் விண்டோஸ் 8 புது வெர்ஷன் ஓடும் தன் லாப்டாப்பை பார்த்திபனிடம் அக்கறையுடன் தருகிறார்.

பார்த்திபன் அதை கையில் வாங்கி பார்க்கிறார்.  என்னென்னமோ செய்து பார்க்கிறார்.  கீயை தட்டி பார்க்கிறார்.  ட்ராக்பேடை விரலால் தேய்த்துப் பார்க்கிறார்.

வடிவேலுக்கு ஒன்னும் புரியவில்லை.  "என்னடா இவன் நேரா வந்தான். அதை தூக்கு.  இதை தூக்குன்னு சொன்னான்.  இவன் சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டி தப்பு பண்ணிட்டோமோ?"ன்னு மனதுக்குள்  நினைத்துக்கொண்ட வடிவேலுக்கு பெரும் குழப்பமே வந்துவிட்டது.

இருந்தாலும் "சரி.  இவ்வளவு நேரம் பொறுத்துட்டோம். கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்னு "  நினைத்துக்கொண்டார்.  குரலை கொஞ்சம் கனிவாக்கிக்கொண்டு, " அப்படி என்ன அதுல தேடறீங்க. தெரிஞ்சுக்கலாமா? என்று கேட்டார்.

ஒரு வித கலவரத்துடன் தலையை நிமிர்த்தி வடிவேலுவை பார்த்த பார்த்திபன், " சார்... நானும் எவ்வளவோ தேடிட்டேன். ஒரு விண்டோவைக்கூட இந்த விண்டோஸ் 8-லே என்னால கண்டுபிடிக்க முடியலே.  எல்லாம் ஒரே டைல்ஸா இருக்கு.  வேணும்னா இதுக்கு "டைல்ஸ் 8"-ன்னு பேர் வைச்சுடலாமா சார்?"னு சீரியசாக கேட்க,

விண்டோஸ் 8 ஸ்க்ரீன்ஷாட்
 
நிலைமையின் விபரீதம் புரிந்து வடிவேலுக்கு உலகமே சுற்ற ஆரம்பித்துவிட்டது.

" அய்யய்யோ... 25 வருஷமா கட்டிக்காத்து வந்த பிராண்ட் பேரை மாத்தச் சொல்றானே.  ஒரே ஒரு லோகோவை வச்சிகினு இப்படி புரட்டி எடுக்கறானே.   என்னால தாங்க முடியலேடா.  நான் எங்கனா போய் நிம்மதியா இருந்துக்குறேன். தயவு செய்து என்னை விட்டுடுடா"ன்னு அலறிக் கொண்டே அந்த பில்டிங்கை விட்டு ஓடியவர்தான்.  இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

வடிவேலு இருக்கும்  இடம் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்..

ஆக்கம், கற்பனை

மென்பொருள் பிரபு.


Apple Name and logo Registered Trade marks of Apple inc.
Windows name and logo Registered trade mark of Microsoft Inc. 
Names and logos  used under fair use policy.
Other picture's trademarks/copyrights acknowledged.

This is a pure imagination.

17 February, 2012

ஆப்பிளின் "நான் அவனில்லை"


கடந்த வருடம் பிப்ரவரியில்,  சிலிக்கான் வாலி ஜாம்பவான்களோடு நடந்த ஒரு டின்னரில், அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா உள்நாட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கும் எண்ணத்துடன் ஸ்டீவ் ஜாப்பிடம், ' உங்க ஆப்பிள் ஐபோனை  அவுட்சோர்ஸ் செய்யாமல் ஏன் அமெரிக்காவிலேயே தயாரிக்கக்கூடாது?  " என்று வெள்ளந்தியாக கேட்கப்போக,  அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் "அந்த வேலையெல்லாம் போனது போனதுதான்.  திரும்பி வராது' என்று  நாக் அவுட் கொடுத்து நடையை கட்டிவிட்டாராம்.

"ஐபோன் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை ஆகிறது.  ஐபோனை சிறந்த முறையில் வடிவமைப்பதுதான் எங்கள் வேலை. அதை அமெரிக்காவில் உற்பத்தி செய்து அந்நாட்டின் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்ப்பது எங்கள் வேலை இல்லை " என்று விளக்கம் கொடுக்கிறார் ஆப்பிளின் அதிகாரி ஒருவர்.

வேலைகளை அவுட்சோர்சிங் செய்து, கொழுத்த லாபத்தை ருசி காணும்  அமெரிக்க கம்பெனிகள்,  ஓபாமா சொல்வதை அப்படியே செயல்படுத்தி நஷ்டப்படும்  அளவுக்கு 'இளிச்சவாயர்களா' என்ன? 

இருந்தாலும், அமெரிக்காவை விட்டு வெளிநாட்டுகளுக்குப் போய்விட்ட வேலைகளை,  திரும்ப கொண்டு வந்து பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதே என் இலக்கு  என்று  ஓபாமா (வேறு வழியில்லாமல்) ஓங்கி குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

ஏனென்றால் இது அமெரிக்காவில் தேர்தல் வருடம்!

கொள்ளை லாபம் அடிக்கும் கம்பெனிகள் ஒருபுறம். அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் மறுபுறம்.

இந்த நிலையில் ஓபாமா வீசும் இந்த வலையில் புதிய வேலைகள் கிடைக்கிறதோ இல்லையோ,   ஓட்டுகள் கணிசமாக சிக்கலாம். :)

--------------------------------------------------------------------------------------

Related: இந்தியர் விசாக்கள் அதிகமாக நிராகரிக்கப்பட்டது ஒபாமா ஆட்சியில்தான்!


Photo Copyright Notice
Creative Commons
Except where otherwise noted, content on this site is licensed under a Creative Commons Attribution 3.0 License. Content includes all materials posted by the Obama-Biden Transition project. Visitors to this website agree to grant a non-exclusive, irrevocable, royalty-free license to the rest of the world for their submissions to Change.gov under the Creative Commons Attribution 3.0 License.

http://change.gov/about/copyright_policy

14 February, 2012

ஆப்பிள் > (கூகிள் + மைக்ரோசாப்ட்)! எப்படி?


ஒரு கம்பெனியின் வலிமையை எடைபோட பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மார்கெட் கேப்பிடலைசேஷன்.

முதலில் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் என்றால் என்ன? என்று பார்ப்போம்.

ஒரு பங்கின் சந்தை விலையை, அந்த கம்பெனி வெளியிட்டுள்ள மொத்த ஷேர்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் வரும் தொகைதான் மார்க்கெட் கேப்பிடலைசேஷன்.  சுருக்கமாக மார்க்கெட் கேப்.

மார்கெட் கேப் = ஒரு பங்கின் விலை x மொத்த பங்குகளின் எண்ணிக்கை.

ஆப்பிள் கம்பெனியின் ஷேர் சக்கை போடு போட்டுகொண்டு இருக்கிறது.

2012 பிப்ரவரி 10ஆம் தேதி நாஸ்டாக் சந்தை மூடும்போது ஒரு ஆப்பிள் ஷேர் $493 ஆக இருந்தது. மார்க்கெட் கேப் கணக்கு போட்டால் $460 பில்லியன் வருகிறது.

அன்றைய தேதியின் மைக்ரோசாப்ட் மார்கெட் கேப்பையும், கூகிளின் மார்கெட் கேப்பையும் ஒருசேர கூட்டினால்கூட அது ஆப்பிளின் மார்கெட் கேப்பை தொட முடியவில்லை.

கூகிள் மார்கெட் கேப்......................$197 பில்லியன்கள்

மைக்ரோசாப்ட் மார்கெட் கேப்............$256 பில்லியன்கள்

மொத்தம்....................................$453 பில்லியன்கள்

ஆப்பிள் மார்கெட் கேப் மட்டும்......$460 பில்லியன்கள்

அரசு நடத்தாத கம்பெனிகளில் அதிக மார்கெட் கேப் உலக அளவில் ஆப்பிளுக்குதான். ஆயில் கம்பெனி எக்சனுக்கு இரண்டாவது இடம்தான் ($397 பில்லியன்கள்).

பில்லியன் = 10^9
டிரில்லியன் = 10^12

1000 பில்லியன் = 1 டிரில்லியன்.

மார்கெட் கேப்பில் அரை டிரில்லியன் டாலர்களை தொடப்போகும் முதல் தனியார் கம்பெனியாக ஆப்பிள் சாதனை படைக்கப்போகிறது.

மார்கெட் கேப்பை வைத்துப் பார்த்தால் பிளாக்பெர்ரி தயாரிக்கும் ரிசர்ச் இன் மோஷன் கம்பெனியைவிட ஆப்பிள் சுமார் 50 மடங்கு பெரியது.

இன்றைய விலை:

ஆப்பிள்
கூகிள்
ஃமைக்ரோசாப்ட் 

பங்கு சந்தைகளில் "எது மேலே போகிறதோ கீழே வந்தே தீரவேண்டும்" என்று சொல்வார்கள். (What goes up must come down). 

அந்த விதிக்கு  ' ஆப்பிள்' மட்டும் ஒரு விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?

பின்குறிப்பு: இந்த கட்டுரை வெளியிடும் நேரத்தில் ஆப்பிளின் ஒரு பங்கின் விலை $500-ஐ தாண்டி விட்டது.
back to top