27 May, 2012

வசீகரன் Vs. சிட்டி (Sci-Fi Thriller)

காட்சி எண் 1

இடம்: சஞ்சனா வீட்டின் வரவேற்பறை.

ஊஞ்சலில் ஆடிக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்த 'சனா'விற்கு ஒரே ஒரு குழப்பம்தான். இளமை துள்ளும் வயதில் ஒரு பெண்ணுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?

காதல்தான்.

யாருடைய காதலை ஏற்றுக்கொள்வது?

வசீகரனா?

'Robot' சிட்டியா?

இந்த இரண்டில் யாரை மணமுடிப்பது?

தோழியின் வீட்டில்,  சந்தித்த அரை மணி நேரத்திலேயே அவள் மனதில் கன்டெய்னர் சைஸ் இடத்தை பிடித்துவிட்ட ஏற்றுமதி பிசினஸ் செய்யும் வசீகரனா?

அல்லது ஊட்டி மலைப்பாதையில் அவள் கார் ஓட்டிக்கொண்டு இறங்கும்போது,  அது பிரேக் பிடிக்காமல் விபத்தில் சிக்க,  தன் உயிரை!? பணயம் வைத்து சனாவை காப்பாற்றிய 'ரோபோ' சிட்டியா?

தன் அன்பு அப்பாவிடம் தன் விருப்பத்தை தெரிவித்தபோது அவர் சொன்ன ஒரு நிபந்தனை அவளின் குழப்பத்தை  மேலும் அதிகமாக்கியது.

"என்னம்மா? ஏதாவது முடிவெடுத்தியா?" கேட்டுக்கொண்டே வந்து டிவி பார்க்க அவளோடு ஊஞ்சலில் அமர்ந்தார் அப்பா ராஜசேகர்... பெல் கணினி நிறுவன முதலாளி... கோடீஸ்வரர்.

"அதைப்பத்திதான் யோசிக்கிறேன்பா. சொல்றேனே."

டிவியில் அஜீத் நடித்த 'அசல்' படத்திலிருந்து காட்சிகள் ஓடிக்கொண்டு இருந்தது. அஜீத்தும் வில்லனும் டேபிளில் பிரித்துப்போட்டு இருந்த துப்பாக்கியின் பாகங்களை யார் முதலில் அசெம்பிள் செய்து, மற்றவனை போட்டுத்தள்ளுவது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

அதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த சனாவிற்கு மனதில் ஒரு பொறி தட்ட, திரும்பி பக்கத்தில் இருந்த அப்பாவைப் பார்த்தாள்.  அதே காட்சியை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவும்  சனாவைப் பார்க்க....கணநேர நிசப்தம்.

மகள் சொல்லவந்ததை புரிந்துகொண்ட ராஜசேகர்...."அவங்களை நாளைக்கு மார்னிங் 10 மணிக்கு என்னை ஆபீஸ்லே வந்து பார்க்கச்சொல்லும்மா".

-------------------

காட்சி எண் 2

இடம் : பெல் நிறுவன அலுவலகம்.

பாத்திரங்கள்: சனா, அப்பா, வசீகரன், சிட்டி

அப்பா: "வெல்கம் எவரிபடி. என் டாட்டர் சனா எனக்கு ஒரே வாரிசு. அவள் இந்த லவ் மேட்டரை என்கிட்டே சொன்னபோது நான் ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டேன்.

எனக்குப் பிறகு என் பெண்ணை வைத்து நல்லா வாழறது மட்டும் இல்லே. இந்த பெல் நிறுவனத்தையும் யார் திறமையா மேனேஜ் செய்வாரோ, அவருக்குத்தான் நான் என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பேன்.

என் டாட்டரை விரும்புற உங்க ரெண்டு பேர்ல என் மாப்பிள்ளையாகப்போகும் அதிர்ஷ்டசாலி யார்னு கண்டுபிடிக்க ஒரு சின்ன போட்டி வைக்கப்போறேன்".

அந்த அறையின் ஒருபக்க சுவர் அப்படியே விலகுகிறது. பெல் நிறுவன பேக்டரியின் ஷாப் ஃப்ளோர் தெரிகிறது.

அப்பா தொடர்கிறார்: " உங்க ரெண்டு பேர்ல யார் ஒரு கம்ப்யூட்டரை அசெம்பிள் பண்ணி சனாவுக்கு "நான் உன்னைக் காதலிக்கிறேன்"னு முதலில் தமிழில் ஈமெயில் அனுப்புறாங்களோ, அவர்தான் என் மாப்பிள்ளை."

சனா இணைய வசதியுள்ள ஒரு பெல் லேப்டாப்புடன் ரெடியாக இருக்கிறாள்.

"உங்களுக்கு தேவையான பார்ட்ஸ் இந்த லிஸ்டில் இருக்கிறது. பிரச்சனை வந்தா, முடிவெடுக்க இங்கே எக்ஸ்பர்ட் பேனல்லே 10 பேர் இருக்காங்க. ஏமாத்த நெனச்சா டிஸ்குவாலிஃபை பண்ணிடுவேன். சரியா?"  பேசி முடித்தார் ராஜசேகர்.

சிட்டி: " ஸ்பீட் 1 Terra Hertz, மெமரி 1 Zetta Bytes,  நியூரல் நெட்வொர்க் எடிஷன் ரோபோவான எனக்கு இதெல்லாம் ஒரு விஷயமா?  வருங்கால மாமனாரே இப்படி match-ஐ எனக்கு சாதகமா fix செய்துடுவார்னு நான் கனவுலேகூட நினைக்கலே." சந்தோஷப்பட்டான் சிட்டி.

வேற ஏதாவது போட்டி வெச்சிருந்தாகூட வின் பண்ண சான்ஸ் இருக்கும். மெஷினுக்கு போட்டியா ஒரு கம்ப்யூட்டரை  அசெம்பிள் செய்து ஜெயிக்க சொல்றாரே இந்த ஆள்.  சரியான சைக்கோவா இருப்பானோ? .......இப்படி யோசித்துக்கொண்டு இருந்த வசீகரனுக்கு ஒன்றும் பேசமுடியவில்லை.

தன் குருவை நினைத்து அவரின் ஆசிகளை வேண்டிக்கொண்டே ஷாப் ஃப்ளோருக்கு வந்தார் வசீகரன். இரண்டு பேருக்கும் பார்ட்ஸ் லிஸ்டின் காப்பிகளை கொடுத்தார்கள்.

ஸ்டார்ட் சிக்னல் வந்தவுடன் ரோபோ சிட்டி சும்மா தீயா வேலை செய்தான்.

லேட்டஸ்ட் மதர்போர்டு, குவாட் கோர் பிராசசர், டிவிடி ரோம், 4 GB மெமரின்னு எல்லாம் லேட்டஸ்ட் அன்ட் கிரேட்டஸ்ட்டாப் பார்த்து எடுத்து, டவர் டைப் கேபினெட்டில் கடகடன்னு அசெம்பிள் பண்ணிக்கிட்டே இருந்தான் சிட்டி.

வசீகரன் அந்த லிஸ்டையே சில நொடிகள் பார்த்துக் கொண்டு இருந்தார். அதில் இருந்த ஒரு என்ட்ரி அவரை சற்றே யோசிக்க வைத்தது. பிறகுதான் வேலையை ஆரம்பித்தார்.

மதர்போர்டு ஸ்க்ரூவையெல்லாம் தன் இயந்திர கைகளைப் பயன்படுத்தி நொடிகளில் மாட்டிவிட்டு, பத்தே நிமிடங்களில் மெஷினை ரெடி செய்துவிட்டான் ரோபோ சிட்டி.

பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு ஆபரேடிங் சிஸ்ட்டத்தின் (OS) டிவிடியை டிரைவில் போட்டு பிசியை ஆன் செய்து இன்ஸ்டலேஷனுக்காக பூட் செய்ய ஆரம்பித்தான்.

சிட்டியின் பி.சி இன்னும் முக்கால் மணி நேரத்தில் உன் சிஸ்டம் ரெடியாகிவிடும் என்று சொல்லிவிட்டு டிவிடியில் இருந்த இன்ஸ்டலேஷன் ஃபைல்களை அசுர வேகத்தில் முழுங்க ஆரம்பித்தது.

சிட்டி பக்கத்தில் இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு வசீகரனை கண்காணிக்க ஆரம்பித்தான்.

வசீகரன் பார்ட்ஸை செலக்ட் செய்யும்போது இன்டெல் மதர்போர்டு, டூயல் கோர், 2 GB மெமரி இப்படி ஆவரேஜாத்தான் செலக்ட் செய்தார். ஸ்க்ரூடிரைவரை வைத்து மதர்போர்டு ஸ்க்ரூவை மாட்டயற்சிக்கும்போது கொஞ்சம் சிரமப்பட்டார்.

இரண்டாவது ஸ்க்ரூ எடுக்கும்போது சிட்டி வசீகரனைப் பார்த்து" என்ன மாப்ளே? நீ ஒரு ஸ்க்ரூ மாட்டினா 100 ஸ்க்ரூ மாட்னா மாதிரிதானே? அப்படித்தான் கேள்விப்பட்டேன்" என்று கிண்டலாக சொல்லிவிட்டு பேய் சிரிப்பு சிரித்தான். வசீகரன் அதை கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையில் சிட்டியின் PC  மதர்போர்டுக்கு, ஆடியோவுக்கு, நெட்வொர்க் கார்டுக்கு இப்படி ஒவ்வொன்னுத்துக்கும் டிரைவர் சாஃப்ட்வேர் கேட்க,  சிட்டி அந்தந்த டிரைவர் சிடியை தேடி எடுத்து ஒவ்வொன்னா கொடுத்து,  PC கேட்கும்போதெல்லாம் ரீஸ்டார்ட்டும் செய்துகொண்டு வந்தான் சிட்டி.

வசீகரன் கணினியை ரெடி செய்து முடித்தபோது, சிட்டியின் பிசி "இன்னும் 6 நிமிஷம்தான் பாக்கி பாஸ்" என்று கவுன்ட்டெளன் காண்பித்தது.

அப்போது வசீகரன் யாரும் எதிர்பாராத விதமாக ஷாப் ஃப்ளோரின் ஒரு மூலையை நோக்கி பார்ட்ஸ் லிஸ்டுடன் ஓட்டம் பிடித்தார். எல்லாருக்கும் ஷாக்.

இரண்டே நிமிடங்களில் அதே வேகத்தில் திரும்பி வந்த வசீகரனின் கையில் ஒரு டிவிடி இருந்தது. பேர் 'சுதந்திர OS லைவ் டிவிடி'. அதன் கவரில் மூன்றே மூன்று இன்ஸ்ட்ரக்ஷன்தான்.

1. BIOS-ல் Boot from DVD செட் செய்.

2. இந்த டிவிடியை வைத்து பூட் செய்.

3. இதை பயன்படுத்த முதலில் இன்ஸ்டால் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. முதலில் உபயோகித்து பார்த்துவிட்டு, பின்னால் வேண்டுமென்றால் hard disk-ல் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

வசீகரன் இந்த 3 பாயின்ட்களையும் கவனமாக புரிந்துகொண்டார்.

சிட்டியின் பிசி "எல்லாம் ஓவர். என்னை ஒருவாட்டி ரீஸ்டார்ட் பண்ணா போதும்னு" சொல்ல சிட்டி பிசியை ரீஸ்டார்ட் செய்தான்.

கிட்டத்தட்ட அதே நொடியில் வசீகரனும் தன் பிசியை சுதந்திர டிவிடி போட்டு 'On' செய்தார். Del கீ அழுத்தி Bios போய் 'Boot from DVD' செட் செய்து 'Save and exit' கொடுக்க வசீகரன் பிசி ரீஸ்டார்ட் ஆகியது.

சிட்டியின் பிசி "இப்பத்தான் நான் முதல் முறையா பூட் ஆகறேன். அதனால் சில செட்டிங் செய்ய வேண்டியிருக்கிறதுன்னு செட்டிங் செய்ய போய்விட்டது.

வசீகரனின் பிசி பூட் ஆனவுடன் இன்ஸ்டால் செய்ய வேண்டுமா? அல்லது try செய்து பார்க்க வேண்டுமா என்று கேட்டு நிற்க, வசீகரன் try செலக்ட் செய்தார்.

வசியின் பிசி, boot செய்யும்போதே மதர்போர்டு, ஆடியோ, வீடியோ, கீபோர்டு, மெளஸ், நெட்வொர்க் கார்டு இப்படி சகலத்துக்கும் டிவிடியில் இருக்கும் டிரைவர்களையே பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துவிட்டது.

இதனால் வசியின் பிசியில் 3 நிமிடத்திலேயே டெஸ்க்டாப் வந்துவிட்டது.

அதுவரை வசீகரனை நக்கலாக பார்த்துக்கொண்டு வந்த சிட்டி, வசீகரனின் பிசி மானிட்டரில் graphical டெஸ்க்டாப் வந்துவிட்டதை பார்த்தபிறகு டெரராகி அலறினான்.

"ஹே. வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர். இந்த ஆளு ஏதோ தில்லுமுல்லு செய்துருக்கான். இல்லாட்டி இவ்வளவு சீக்கிரம் எப்படி டெஸ்க்டாப் வரும்?

முதல்லே அவனை டிஸ்குவாலிஃபை பண்ணுங்க."

எக்ஸ்பர்ட் பேனலைப் பார்த்து கத்திய சிட்டியை அவர்கள் சட்டை செய்யவே இல்லை.

எக்ஸ்பர்ட் பேனல் ரியாக்ஷனே கொடுக்காததை பார்த்த சிட்டி அப்போதுதான் கவனித்தான். அவன் அப்பீல் செய்ய ஆரம்பித்தபோதோ அவனுக்கும் டெஸ்க்டாப் வந்து ரெடியாக இருக்கிறது என்பதை. சிட்டி உடனே அந்த ஆபரேடிங் சிஸ்டத்தின் பிரெளசரை டபுள் கிளிக் செய்ய, அது உடனே லோடாகியது.

சிட்டிக்கு முன்னேயே டெஸ்க்டாப் வந்துவிட்ட வசீகரன், 'இன்ஸ்டால் சுதந்திர OS' ஐகானை டபுள் கிளிக் செய்யவில்லை.  நேராக சுதந்திர பிரெளசரை ஓப்பன் செய்துவிட்டு ஜீமெயில் போய்விட்டார்.

ஜீமெயிலுக்கு உள்ளே போய், compose பட்டனை கிளிக் செய்து, இங்லீஷ் டு தமிழ் ட்ரான்ஸ்லிட்டரேஷனை activate செய்து, "naan unnai .." என்று ஆங்கில கீபோர்டில் அடித்து, கட் செய்து சப்ஜெக்ட் லைனில் பேஸ்ட் செய்தார் வசி.

ரோபோ சிட்டி தன் மெயில் அக்கவுண்டில் நுழையவும், இன்பாக்சில் "மாப்ளே, match fix ஆயிடுச்சு. கல்யாணத்துக்கு மறக்காம வந்துடு" என்று வசீகரன் ஈமெயிலிலிருந்து வந்த செய்தி வரவும் சரியாக இருந்தது.

வசீகரன் பக்கம் கிரீன் லைட்டும், தன் பக்கம் ரெட் லைட்டும் எரிந்ததை பார்த்த சிட்டிக்கு, வசீகரன் முந்திக்கொண்டு மெயில் அனுப்பிவிட்டதால் தான் தோற்றுப் போனது தெளிவாக புரிந்தது.

இந்த சுதந்திர ஆபரேடிங் சிஸ்டத்தின் Live DVD மட்டும் அந்த பார்ட்ஸ் லிஸ்டில் இருந்திருக்காவிட்டால், இந்த போட்டியில் ஜெயித்திருக்க முடியாது என்று வசீகரனுக்கு நன்றாக புரிந்தது.

அந்த டிவிடியை வசி கையில் எடுத்து நன்றியுடன் முத்தம் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத சிட்டி, தான் பயன்படுத்திய டிவிடியை வெறுப்புடன் எடுத்து ஒரே கையால் நொறுக்கிப் போட்டான்.

வசீகரனும் சனாவும் பாடுகிறார்கள்.

நீ சுதந்திரம் தந்த வரம் வரம்
கலந்திடுவோம் இனி நிதம் நிதம்.

கற்பனை, ஆக்கம்
மென்பொருள் பிரபு

Deleted Scenes.

போட்டி முடிந்தவுடன் நடந்த பிரஸ் கான்ஃபரன்சில் வசீகரன் சொன்னது.

கேள்வி: எக்ஸ்போர்ட் பிசினசில் இருக்கும் உங்களுக்கு இந்த சுதந்திர OS Live DVD  பத்தி எப்படி தெரிந்தது?   அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே.

வசீகரன்: எல்லாம் என் குருவோட ஆசீர்வாதம்தான். அவர் "யாருக்காகவும், எதுக்காகவும் உன் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காதே"ன்னு என்னிடம் அடிக்கடி சொல்வார். கணினி மென்பொருள்னு வந்தா, அதுலேயும் சுதந்திரம் கிடைக்குமா? என்று தேடினேன். கிடைத்தது. அப்படித்தான் சுதந்திர OS பற்றி தெரிந்துகொண்டேன்.

கேள்வி: அதை ஏன் சிட்டி பயன்படுத்தவில்லை?

வசீகரன்: அவருக்கு அதைப் பற்றியே தெரியவில்லை. 2 பேருக்கும் அதே பார்ட்ஸ் லிஸ்ட்தானே வந்தது. அந்த லிஸ்டில் சுதந்திர OS டிவிடி இருந்ததே.

கேள்வி: சிட்டி சுதந்திர OS செலக்ட் செய்து இருந்தால்?

வசீகரன்: அவர்தான் ஜெயித்திருப்பார். சந்தேகமேயில்லை.
back to top